ரூ.20-க்கு கிலோ அரிசி திட்டம் அறிமுகம்
ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்பனை செய்யும் திட்டம் ஈரோட்டில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் தொடக்க விழா ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நடைபெற்றது. இத் திட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் பேசியது:
குறைந்த விலையில் தரமான அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நடத்தப்படும் அமுதம் கூட்டுறவு அங்காடிகள், புதிதாகத் திறக்கப்படவுள்ள சிறப்புக் கடைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மொத்த விற்பனை பண்டக சாலைகளால் நடத்தப்படும் சில்லறை அங்காடிகளில் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இத் திட்டத்தில் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி 5,10, 25 கிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கும் என்றார்.
மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணைமேயர் கே.சி.பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் துர்கா மூர்த்தி, மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்கள் இரா.மனோகரன், பி.கேசவமூர்த்தி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் த.பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.