தினமணி 11.12.2009
அறந்தாங்கியில் ரூ. 20 லட்சத்தில் ஆடு அறுக்கும் மையம் திறப்பு
அறந்தாங்கி, டிச. 9: அறந்தாங்கியில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட ஆடு அறுக்கும் மையக் கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தின் திறப்பு விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.ஏ.என். கச்சுமுஹம்மது முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம் மையத்தைத் திறந்துவைத்தார்.
இந்த மையம் குறித்து நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் கூறுகையில், “”ஆடுகளை அறுப்பதற்கும் உறிப்பதற்கும் குடல் உள்ளிட்ட பகுதிகளைச் சுத்தம் செய்வதற்கும் தனித் தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் கால்நடை மருத்துவர் சான்று வழங்கிய பின்னரே ஆடுகளை அறுக்க வேண்டும். மேலும், நகரில் நடைபெறும் திருமணம் மற்றும் அனைத்து விழாக்களில் மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் இங்கு வந்துதான் ஆடுகளை வெட்டி கொண்டுசெல்ல வேண்டும்” என்று கூறினார்.
மணமேல்குடி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் எஸ்.எம். சீனியார்,நகராட்சிப் பொறியாளர் க. ரெங்கராசு, மேலாளர் என்.ஆர். ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் எஸ். சேகர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.