20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: கோவையில், குறைந்த விலை அரிசி வாங்க பொது மக்கள் ஆர்வம்
கோவையில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை பொது மக்கள் ஆர்வத்துடன் வங்கி வருகிறார்கள்.
குறைந்தவிலை அரிசி திட்டம்
தமிழ்நாட்டில் வெளி மார்க்கெட்டில் அரிசி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கி வைத்தார். குறைந்த விலை அரிசி திட்டத்துக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரிசி சப்ளை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் 800 கிலோ விற்பனை
கோவையில் குறைந்தவிலை அரிசி கோவை மாநகரில் சிந்தாமணி தலைமை மையம், டவுன்ஹால் பகுதியில் நூலக கட்டிடத்தில் உள்ள சிந்தாமணி மையம், வால்பாறையில் உள்ள சிந்தாமணி மையம் ஆகிய 3 இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தொடக்க நாளில் ஒரே நாளில் 800 கிலோ பச்சை அரிசி மற்றும் புழுங்கல் அரிசி விற்பனை செய்யப்பட்டது.
குறைந்த விலை அரிசியை வாங்குவதற்காக நேற்று முன்தினம் காலை முதலே நீண்ட வரிசையில் பொது மக்கள் நின்று அரிசியை வாங்கினார்கள். இதற்காக 4 ஆயிரம் டன் அரிசி வாங்கி 3 மையங்களில் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. அரிசி தீர தீர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடமிருந்து அரிசி வாங்கப்படும். குறைந்தவிலை அரிசி திட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்பட நகராட்சி பகுதிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். பொது மக்கள் ஒரு கிலோ அரிசி கேட்டால் கூட விற்பனை செய்யப்படும். மேலும் 5 கிலோ, 10 கிலோ பைகளிலும் விற்கப்படும்.
மேற்கண்ட தகவலை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.