கோவை மாநகராட்சியில் 20 பேருக்கு பணி நியமன ஆணை மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்
கோவை மாநகராட்சியில் வேலை பார்த்து பணியின்போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுகள் 20 பேருக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் செ.ம.வேலுசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, கோவை மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 136 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருந்தது. இப்போது மேலும் 20 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் மொத்தம் 156 பேர் பணி நியமன உத்தரவுகளை பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் லதா, துணைமேயர் லீலாவதிஉண்ணி, துணை கமிஷனர் சு.சிவராசு, மண்டல தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், பி.சாவித்திரி பார்த்திபன், நிலைக்குழு தலைவர் எம்.ராஜேந்திரன், கே.அர்ச்சுனன், ஆர்.சாந்தாமணி, எஸ்.தாமரை செல்வி, கவுன்சிலர் சாதிக் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.