தினமலர் 12.01.2010
கால்வாயை நீட்டிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
திருப்பூர் : வடிகால் வசதி முழுமை இல்லாமல், பாதியில் நின்ற சாக்கடை கால்வாய் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, நல்லூர் நகராட்சி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பொங்கல் திருநாளுக்கு பின், பணி துவங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.நல்லூர் நகராட்சி 11வது வார்டு அமர்ஜோதி நகர், ஏ.எஸ்., நகர் விரிவு, மூன்றாவது வீதியில், போதிய வடிகால் வசதி இல்லாமல் கழிவு நீர் தேங்கி வருகிறது. வீதியின் பாதியில் சாக்கடை கால்வாய் பணி நின்று, ரோட்டில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை ஏற்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன், கே.என்.எஸ்., கார்டன் பகுதி சாக்கடை நீரும் இத்துடன் இணைந்ததால், நீர்தேக்கம் அதிகரித்துள்ளது.
ஓராண்டாக தொடர்ந்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கழிவு நீர் தேக்கம் ஏற்படாமல் தடுக்கவும், பாதியுடன் நின்ற கால்வாயை நீட்டிக்கவும் நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கியுள்ளது.நகராட்சி தலைவி விஜயலட்சுமி கூறுகையில், “”செரங்காடு பகுதியில் வடிகால் வசதியை மேம்படுத்த 20 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. டெண்டர் கோரப் பட்டுள்ளது. பொங்கல் முடிந்ததும் பணி துவங்கும்.இப்பணியை மேற் கொள்வதால், அமர்ஜோதி நகர், செரங்காடு, பத்மினி கார்டன் பகுதிகளில் உள்ள 300 வீடுகள் பயன்பெறும்,” என்றார்.