தினகரன் 04.10.2010
ஒரே நாளில் மாநகராட்சி அதிரடி ரூ200 கோடி மதிப்புள்ள 52 கிரவுண்ட் நிலம் மீட்பு
சென்னை, அக்.4: தேனாம்பேட்டை அண்ணா சாலை உட்பட 14 இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ200 கோடி மதிப்புள்ள 52 கிரவுண்ட் நிலம் நேற்று ஒரே நாளில் மீட்கப்பட்டது.சென்னையில் பெரிய குடியிருப்பு, வணிக வளாகங்கள் கட்டும்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) விதிகளின்படி குறிப்பிட்ட அளவு திறந்தவெளி நிலத்தை (ஓஸ்எஸ்ஆர்) மாநகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும்.
இப்படி ஒதுக்கப்பட்ட நிலங்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கை, மாநகராட்சியால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் உள்ள ஹயாத் நிறுவனத்திடமிருந்து சுமார் எட்டரை கிரவுண்ட் நிலத்தை, மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கையகப்படுத்தினர்.அந்த இடத்தில் “மாநகராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி நிலம்” என பெயர் பலகை வைக்கப்பட்டது.
இதுகுறித்து மேயர் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ3,500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, பூங்காக்கள் அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அடையாறு மண்டலத்தில் 26 இடங்களில் ரூ300 கோடி மதிப்புள்ள 136 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டது.
இன்று (நேற்று) மண்டலம் 8ல் தி.நகர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம், சாலிகிராமம் போன்ற 14 இடங்களில் 52 கிரவுண்ட் நிலம் தனியாரிடமிருந்து மாநகராட்சி கையகப்படுத்தி உள்ளது.
தேனாம்பேட்டையில் உள்ள இந்த இடம் சுமார் எட்டரை கிரவுண்ட். இது, ரூ50 கோடியாகும். இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்படும். இந்த இடத்தில் ஆக்கிரமித்து வைத்துள்ள கட்டுமான பொருட்கள் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கோயில் ஆகியவற்றை ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று ஹயாத் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 14 இடங்களில் 52 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 200 கோடி. எந்தெந்த இடங்களில் ஓஎஸ்ஆர் நிலங்கள் ஒப்படைக்காமல் இருக்கிறது என்று மாநகராட்சி விழிப்புணர்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கும். இவ்வாறு மேயர் தெரிவித்தார். தலைமை பொறியாளர் முருகேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மீட்கப்பட்ட நிலத்தில் ‘மாநகராட்சிக்கு சொந்தமான இடம்’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.