தினமலர் 27.07.2012
சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.200 அபராதம்
மதுராந்தகம் : சாலைகளில் குப்பை கொட்டினால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மதுராந்தகம் நகராட்சி அறிவித்து உள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதியிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. மாவட்டத்திலேயே, முதன் முறையாக, இந்த பாராட்டத்தக்க நடைமுறை அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
அனைத்து உள்ளாட்சிகளிலும் குப்பை பிரச்னை தலைவிரித்து ஆடு கிறது. திடக்கழிவு மேலாண்மைக்கு, குப்பையில் இருந்து மின்சாரம், குப்பை உரத்தில் காய்கறி சாகுபடி என, பல திட் டங்கள் அறிவிக்கப் பட்டாலும், செயல்பாட்டிற்கு வருவதாக தெரியவில்லை.
எடுக்க, எடுக்க, எடுக்க…மதுராந்தகத்தில், வாரம்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெறும். மருத்துவமனை சாலை, ஜி.எஸ்.டி. சாலை, போன்றவற்றில் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால், பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் குப்பை மலை போல் குவிகிறது. நகராட்சி சார்பில் குப்பை அகற்றப் பட்டாலும், தொடர்ந்து, சாலைகளில் குப்பை வீசப்படுவதால், அவற்றை முழுமையாக அகற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.எடுக்க, எடுக்க, சாலைகளில் குப்பை குறையாததால், நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. நேற்று முன்தினம், மாலையில் நடந்த, நகராட்சி கூட்டத்தில், சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையிலான தீர்மானம் கொண்டு வரப் பட்டது.
அபராதம் அதன்படி, முதல் கட்டமாக,மதுராந்தகம் நகராட்சியில் உள்ள பிரதான சாலைகளில் குப்பை கொட்ட தடை விதிக்கப் பட்டு உள்ளது. இதை மீறி குப்பை கொட்டுவோருக்கு, இரண்டு முறை அறிவுரை வழங்கப்படும். அதன் பின்னரும் தொடர்ந்தால், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று, நகராட்சி அறிவித்து உள்ளது.
இது குறித்து, நகராட்சி தலைவர், மலர்விழிகுமார் கூறும்போது,””முதல் கட்டமாக பிரதான சாலைகளில், குப்பை கொட்ட தடை விதித்து உள்ளோம். இதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. படிப்படியாக, தெருக்களிலும், குப்பை கொட்ட தடை விதிக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.
குப்பை கொட்ட தடை செய்யப் பட்டு உள்ள பகுதிகளில், குப்பையை சேகரிக்க மாற்று ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. அந்த பகுதிகளில், தினமும் காலை 6.30 மணியில் இருந்து 11 மணி வரை, மூன்று லாரிகளில் நகராட்சி ஊழியர்கள் குப்பையை சேகரிக்க வருவர். அவர்களிடம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் சேரும் குப்பையை, ஒப்படைக்கலாம்.உரிமம் ரத்துதடையை மீறி, சாலைகளில் குப்பை கொட்டும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும், தொடர்ந்து மீறும் நிறுவனங்கள் மீது, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் முடிவாகி உள்ளது.
இது குறித்து, வியாபாரிகள் சங்க செயலர் மீரான் கூறும்போது,””எங்களில் பலர் ஏற்கனவே இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும், என்பதற்காக நகராட்சி எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம்,” என்றார்.