தினமணி 12.11.2009
மழையால் நோய் பரவலைத் தடுக்க மாவட்டத்தில் 200 களப் பணியாளர்கள்
சேலம், நவ. 11: சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், நோய்கள் பரவாமல் தடுக்க 200 களப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, டைபாய்டு உள்ளிட்ட தண்ணீர் மூலம் பரவும் நோய்களும், டெங்கு, சிக்குன் குனியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்களும், மூச்சுக் காற்றின் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சலும் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பொதுமக்களுக்கு குளோரினேற்றம் செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீரையே விநியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அனைத்து மேல்நிலைத் தொட்டிகளையும் மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் குடிநீர் குழாய்களில் கசிவு உள்ளதா என்பதை பார்வையிட்டு அவற்றை சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளை நோய்கள் பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பிளீச்சிங் பெüடர், கிருமி நாசினிகள், கொசு மருந்துகள், மருந்துப் பொருள்கள் போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
கொசு மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 10 களப் பணியாளர்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 200 களப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
குடிநீர் மூலம் பரவும் நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் குடிநீரை கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். வீட்டருகில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதுடன், குடிநீர் கொள்கலன்களை துணி, பிளாஸ்டிக் காகிதம் கொண்டு மூடி வைக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.