தினமலர் 06.03.2010
மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை போக்க ரூ.200 கோடியில் திட்டம்
ராஜபாளையம் : மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், சீரான குடிநீர் வழங்கும் வகையில், 200 கோடி ரூபாயில் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். ராஜபாளையத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிஜி தாமஸ், கணேசன் டி.ஆர்.ஓ., முன்னிலை வகித்தனர். கலெக்டர் சிஜி தாமஸ் பேசுகையில், “”மாவட்டத் தில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. வறட்சியை சமாளிக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது. வைகை, தாமிரபரணியிலிருந்து தண்ணீர் பெறுவதுடன், வேறு சில திட்டங்களையும் கொண்டு வர உள்ளோம். மாவட்டத்தை பசுமையாக மாற்ற வரும் ஜூன் 5ம் தேதி, 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் மரக்கன்றுகளை மக்கள் ஒத்துழைப்புடன் நட்டு வளர்க்க திட்டமிடப்பட் டுள்ளது” என்றார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:குடிசைகளே இல்லாத வகையில் அனைத்து வீடுகளையும் கான்கிரீட்டாக மாற்ற 1,800 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்கு அதிக நிதி பெற, முயற்சி செய்து வருகிறேன். இந்த மாவட் டத்தில் நடப்பாண்டில் 10 ஆயிரம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இலக்கு நிர்ணயித்துள் ளோம். தாமிரபரணியிலிருந்து மாவட்டத் தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்வதற்கு 200 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.
ராஜபாளையம் நகராட்சி துணைத் தலைவர் சுப்பராஜா, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திரா, அருப்புக் கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பராஜ் கலந்து கொண்டனர். “கோரிக்கை நிறைவேறுகிறதோ இல்லையோ, வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவிற்காவது பணம் கிடைத்ததே’ என மனுதாரர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
இன்ப அதிர்ச்சி : மதியம் 2.30 மணிக்கு கூட்டம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பலர், முற்பகலிலேயே மண்டபத்திற்கு வந்து காத்திருந்தனர். ஆனால், மாலை 5 மணிக்கு தான் கூட்டம் துவங்கியது. இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள் விரக்தியடைந்திருந்தனர். இந்நிலையில், இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அனைவருக்கும் தலா 50 ரூபாய் வழங்கப் பட்டது.