தினகரன் 09.08.2010
சிவகாசி நகரில் 200 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி நகராட்சி ஆணையர் தகவல்
சிவகாசி ஆக 9: சிவகாசி நகரில் இதுவரை 200 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையாளர் முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து நகராட்சி ஆணையாளர் (பொ) முருகன் கூறியதாவது: சிவகாசி நகரில் வீட்டு நாய்கள் மற்றும் தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு வெறி பிடிக்காமல் தடுக்கும் பொருட்டு இலவச வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நகரில் புதுக்காலனியில் துவக்கப்பட்ட இப்பணிகள் தற்போது நகர் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 200 நாய்களுக்கு வெறி நோய் தடுப் பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுவதால் வீடுகளில் நாய்கள் வளர்ப்போர் அவசியம் இந்த ஊசிகளை தங்கள் நாய்களுக்கு போட்டுக்கொள்ள முன்வரவேண்டும்.
நகரில் சேறும் பிளாஸ்டிக் கழிவுகளை விருதுநகரிலுள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 2 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிபொருளுக்காக கொடுத்தனுப்பினோம். தற்போது 2ம் கட்டமாக நகரில் சேர்ந்த பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு டன் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சிகளிலும் முன்மாதிரியாக சிவகாசி நகராட்சி இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.