தினகரன் 07.10.2010
ஐஐடியில் உயர்கல்வி படிக்க சென்னை பள்ளி மாணவர் 200 பேருக்கு சிறப்பு பயிற்சி மாநகராட்சி புதிய நடவடிக்கைசென்னை, அக்.7: ‘ஐஐடியில் சேர்ந்து உயர்கல்வி படிக்க சென்னை பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது’ என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, கிண்டி ஐஐடியில் உள்ள மேலாண்மைத் துறை மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை ஐஐடியில் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது மேயர் பேசியதாவது: தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, சென்னை பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், வளர்ந்து வரும் கல்வி மாற்றங்களுக்கு ஏற்ப சென்னை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மை திறன், தலைமை பண்பு மற்றும் நிர்வாகத் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு, ஐஐடியில் உள்ள மேலாண்மை துறை மூலம் 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ரூ.7.5 லட்சம் செலவிடப்படுகிறது. அடுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 121 பேருக்கு ரூ.10 லட்சம் செலவில் இதுபோன்ற பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்நிலை கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, உயர்கல்வி பெற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக 9, 11ம் வகுப்புகளில் படிக்கும் திறமையான மாணவர்கள் 200 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஐஐடியில் சேருவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும். இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் சென்னையில் உள்ள ஐஐடியில் உயர்கல்வியில் படிக்க சென்னை பள்ளி மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்ற நல்ல செய்தி வரும். ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்னை பள்ளி மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். இவ்வாறு மேயர் பேசினார்.
ஐஐடி இயக்குனர் ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் (வரி விதிப்பு மற்றும் நிதி) அனுஜார்ஜ், கல்வி நிலைக்குழு தலைவர் ஜானகி, கவுன்சிலர் கென்னடி, மாநகராட்சி கல்வி அதிகாரி மாதேவ பிள்ளை பங்கேற்றனர்.
சென்னை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு மேலாண்மை திறன், தலைமைப் பண்பு மற்றும் நிர்வாகத்திறன் பற்றிய 3 நாள் பயிற்சி வகுப்பு ஐ.ஐ.டி வளாகத்தில் நேற்று தொடங்கியது. மேயர் மா.சுப்பிரமணியன், ஐ.ஐ.டி இயக்குனர் ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் அனுஜார்ஜ், கல்வி அலுவலர் மாதவப்பிள்ளை பங்கேற்றனர்.