2,000 பிளாஸ்டிக் கழிவறைகள் அமைக்க 4-வது முறையாக டெண்டர்
சென்னையில் 2,000 பிளாஸ்டிக் கழிவறைகளை அமைக்க 4-வது முறையாக டெண்டர் வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் 5,000 பிளாஸ்டிக் கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் டெண்டர் வெளியிட்டது. ஆனால் இந்த டெண்டரை ஏற்க ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. அதன் பின்னர் முதலில் 2,000 கழிவறைகளை அமைக்க இரண்டு முறை டெண்டர் கோரப்பட்டது. அவற்றையும் யாரும் ஏற்க முன்வரவில்லை.
இந்த கழிவறைகள் கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் என்ற அடிப்படையில் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் கூறியது: 3 முறை டெண்டர் வெளியிட்டும், இந்தப் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டவில்லை. 1 000, 500, 500 என்று மூன்று டெண்டர்களாக பிரித்து வெளியிட்டபோது, 1,000 கழிவறைகளை அமைக்க ஒரு நிறுவனம் மட்டுமே முன்வந்தது. ஆனால் அந்த நிறுவனமும் ஒப்பந்தம் கோர தகுதியில்லாததால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் ஒப்பந்ததாரர்களை கவரும் வகையில் சில மாற்றங்களுடன் டெண்டர் கோரப்படும். அப்போதும் ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால், சென்னை மாநகராட்சியே அந்தப் பணியை மேற்கொள்ளும்.
இப்போது துருப்பிடிக்காத ஸ்டீல் மூலம் பஸ் நிழற்குடை அமைக்கப்படுவது போன்று பிளாஸ்டிக் கழிவறைகளையும் மாநகராட்சியே அமைக்கும் என்றார். சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது போன்ற பிளாஸ்டிக் கழிவறைகளை “நம்ம டாய்லெட்’ என்ற பெயரில் சோதனை முறையில் அமைத்து தாம்பரம் நகராட்சி செயல்படுத்தி வருகிறது.