தினகரன் 09.08.2010
2007ல் இருந்து 2010 ஜூலை வரை லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய 191 மாநகராட்சி அதிகாரிகள்
புதுடெல்லி, ஆக. 9: 2007ம் ஆண்டில் இருந்து 2010 ஜூலை வரையில் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய மாநகராட்சி அதிகாரிகளின் எண்ணிக்கை 191 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மீது, சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு, நடைபெற்று வரும் பல்வேறு பணிகளில் ஊழல் நடந்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறும் பல பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், 2007ம் ஆண்டிலிருந்து லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய மாநகராட்சி அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய புள்ளி விவரம் வெளிவந்துள்ளது.
2007ம் ஆண்டில் இருந்து 2010 ஜூலை 29ம்தேதி வரையிலான காலக்கட்டத்தில் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய மாநகராட்சி அதிகாரிகளின் எண்ணிக்கை 191. அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு சார்பில் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஆண்டு வாரியாக புள்ளி விவரம் வருமாறு:
2007ம் ஆண்டில் லஞ்சம் வாங்கியதாக சிக்கிக் கொண்ட மாநகராட்சி அதிகாரிகளின் எண்ணிக்கை 68. அவர்கள் மீதான வழக்குகள் 32.
2008ம் ஆண்டில் 60 அதிகாரிகள் சிக்கினர். அவர்கள் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2009ம் ஆண்டில் லஞ்சம் வாங்கி வசமாக மாட்டிக் கொண்ட அதிகாரிகள் 43 பேர். அவர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 20.
இந்த ஆண்டு ஜூலை 29ம்தேதி வரையில் லஞ்சம் வாங்கி சிக்கிய மாநகராட்சி அதிகாரிகளின் எண்ணிக்கை 20. அவர்கள் மீதான வழக்குகள் 10இவ்வாறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2007ம் ஆண்டு முதல் லஞ்ச வழக்கில் சிக்கிய 191 பேரில் 52 அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டில் 12 பேரும், 2008ம் ஆண்டில் 21 பேரும், 2009ல் 14 பேரும், இந்த ஆண்டு ஐந்து பேரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:
லஞ்சத்தை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இ&டென்டர், சிறப்பு தணிக்கைகள், சிறப்புக்குழுவினரின் அதிரடி ஆய்வுகள், கட்டுமானப் பொருட்களின் தரத்தை 3ம் நபரைக் கொண்டு ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் லஞ்சத்தை ஒழிக்க முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.