தினமணி 02.06.2010
திருவண்ணாமலை நகரில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள்: 2011 ஜனவரியில் முடிவடையும்: எம்எல்ஏ தகவல்
திருவண்ணாமலை, ஜூன் 1: திருவண்ணாமலை நகரில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் 2011-ம் ஆண்டு ஜனவரியில் முடிவடையும் என எம்எல்ஏ கு.பிச்சாண்டி கூறினார்.
திருவண்ணாமலை நகரில் மொத்தம் உள்ள 39 வார்டுகளில் முதல்கட்டமாக 21 வார்டுகளில் 47.6 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீர் குழாய்கள் பதித்து, புதைச் சாக்கடை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம் ரூ.37.87 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியின் மூலம் 12 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக இணைப்புகள் தரப்படுகின்றன. இதனால் 77,404 மக்கள் பயன் அடைவர்.
கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டப் பணிகளில் இதுவரை 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை 40.5 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்றுவரும் புதைச் சாக்கடை திட்டப் பணிகளை மணலூர்பேட்டை சாலை, வேட்டவலம் சாலை உள்ளிட்ட இடங்களில் எம்எல்ஏ கு.பிச்சாண்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். ‘புதைச் சாக்கடை திட்டப் பணிகள் வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் முடிவடையும்’ என எம்எல்ஏ கூறினார்.
நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், பாதாள சாக்கடை திட்ட நிர்வாக பொறியாளர் முருகன், நகராட்சி ஆணையர் சேகர், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் ஆர்.ரகுபதி, ஏ.பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.