தினகரன் 06.08.2010
2011 மார்ச்சில் முடியும் ரூ7.7 கோடி செலவில் ரிப்பன் மாளிகை புதுப்பிப்பு
சென்னை, ஆக.6: ரிப்பன் மாளிகையை புனரமைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் முடிக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வளாகத்திலேயே நிர்வாக வசதிக்காக புதிய கட்டிடம் கட்டும் பணியும் நடக்கிறது. இந்த பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
சென்னை மாநகரில் புராதான கட்டிடங்களில் ஒன்றான ரிப்பன் மாளிகை 1913ம் ஆண்டு கட்டப்பட்டது. முதல் முறையாக தற்போதுதான் இந்த கட்டிடம் புனரமைக்கப்படுகிறது. இந்த பணி, ‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்’ கீழ் மேற்கொள்ளப்படுகிறது. புராதான கட்டிடத்தை புனரமைக்கின்ற வகையில் ரிப்பன் மாளிகைக்கும், விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கும்தான் முதன் முறையாக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இது போன்ற நிதி உதவி அளிக்கப்படவில்லை.
கட்டிட கலைஞர்கள் மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டு ரிப்பன் மாளிகையின் தொன்மை மாறாமல் கலையம்சத்தை பேணும் வகையில் முழுமையாக புனரமைக்கும் பணி நடக்கிறது. இந்த கட்டிடத்தில் மேயர் அலுவலகம், ஆணையாளர் அலுவலகம், மன்றக்கூடம், துறைத் தலைவர்களுக்கான அலுவலகங்கள் ஆகியவை இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. ரூ7.7 கோடி செலவில் நடக்கும் இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடியும்.
இந்த கட்டிடத்தின் தரை தளத்தில், சென்னை நகரின் சிறப்புகளை விளக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதே வளாகத்தில் 6 தளங்களுடன் கூடிய நிர்வாக கட்டிடம், ஒரு லட்சத்து 35 ஆயிரம் சதுர அடியில் ரூ18 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்படுகிறது. இந்த பணி 10 மாதங்களில் முடிக்கப்படும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.