தினமணி 06.08.2010
ரிப்பன் கட்டடம் புதுப்பிக்கும் பணி மார்ச் 2011 ல் முடிக்கப்படும்: மேயர்

ரிப்பன் கட்டடத்தின் சீரமைப்புப் பணியை வியாழக்கிழமை பார்வையிடுகிறார் மேயர் மா. சுப்பிரமணியன்.
சென்னை, ஆக.5: சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணி 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் கட்டடம் புனரமைப்பு பணி மற்றும் கூடுதல் கட்டடப் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: சென்னை நகரில் உள்ள புராதான கட்டடங்களில், மாநகராட்சி ரிப்பன் கட்டடமும் ஒன்றாகும். நூற்றாண்டை நெருங்கி கொண்டிருக்கும் இந்தக் கட்டடம் 1913-ல் கட்டப்பட்டதாகும். சென்னை மாநகராட்சி சார்பில் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கட்டடத்தை தொன்மையும், பழமையும் மாறாமல் ரூ.7.70 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்கப்படும்.
ரிப்பன் கட்டடத்தில் மேயர் அலுவலகம், ஆணையர் அலுவலகம், மன்றக் கூடம், துறைத் தலைவர்கள் ஆகியோர் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மேலும் தரை தளத்தில் சென்னை நகரின் சிறப்புகளையும், பழங்கால வரலாற்றையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
ரிப்பன் கட்டட வளாகத்தில் 6 தளங்களுடன் கூடிய நிர்வாக கட்டடம் 1 லட்சத்து 35 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் 10 மாதங்களில் முடிக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர் (கட்டடம்) குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.