தினகரன் 09.12.2010
2011&12ம் நிதியாண்டுக்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
புதுடெல்லி, டிச. 9: வீட்டு வரி 5 சதவீதம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு வருவாய் நடவடிக்கைகளுடன் கூடிய ரூ6364.43 கோடி மதிப்பீட்டிலான 2011&12ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா நேற்று தாக்கல் செய்தார்.
மாநகராட்சி சிறப்பு நிலைக்குழு கூட்டம் அதன் தலைவர் யோகேந்தர் சந்தோலியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், நடப்பு நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடு மற்றும் 2011&2012ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா தாக்கல் செய்தார். மொத்தம் 6364.43 கோடியிலான அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பசுமை நடவடிக்கைகளுக்கான திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதேபோல் சாலை, வாகன நிறுத்தங்களை கட்டும் திட்டங்கள், கல்வி, மருத்துவமனைகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா பேசியதாவது:
மாநகராட்சிக்கு இப்போது ரூ2,867 கோடி கடன் உள்ளது. இதனால் நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதுடன், வருவாய் இனங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.
இதற்காக வீட்டு வரி 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. வீட்டு வரி உயர்வு விமான நிலைய ஆணைய சொத்துக்கள், வசிப்பதற்கான வீடுகளாக இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பண்ணை வீடுகள், குடியிருப்புகள் அல்லாத சிறப்பு சொத்துக்கள் ஆகியவற்றை தவிர மற்ற எல்லா பிரிவுகளுக்கும் ஒரே மாதிரியாக 5 சதவீத வரி உயர்த்தப்படுகிறது.
இதன்படி ‘ஏ மற்றும் பி’ பிரிவு குடியிருப்புகளுக்கு தற்போதுள்ள 12 சதவீத வரி 17 சதவீதமாகவும், ‘சி, 1397904493 மற்றும் இ’ பிரிவு குடியிருப்புகளுக்கு 11 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகவும், ‘எப், ஜி மற்றும் எச்’ பிரிவு குடியிருப்புகளுக்கு 7 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் வீட்டு வரி உயர்த்தப்படுகிறது. குடியிருப்பு களின் இடத்தை பொறுத்து அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான குடியிருப்பு இடங்கள், குடியிருக்கும் வீடுகளாக பயன்படுத்தும் பண்ணை வீடுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்த வீடுகள் ஆகியவற்றுக்கும் இந்த 5 சதவீத வரி உயர்வு பொருந்தும்.
சாதாரண ஓட்டல்கள், 3 நட்சத்திரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்து உடைய ஓட்டல்கள், மால்கள், ஏ.சி வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளத்துடன் கூடிய கிளப்புகள் ஆகியவற்றுக்கு இப்போதுள்ள வரி விகிதமான 20 சதவீதம் அப்படியே நீடிக்கும்.
முறையாக வரி செலுத்துவோருக்கு இப்போது அளிக்கப்படும் 15 சதவீத தள்ளுபடியானது 10 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும், 100 சதுர மீட்டருக்கு அதிகமுள்ள சொத்துக்கள், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றுக்கு கூடுதல் தள்ளுபடி எதுவும் அளிக்கப்படாது. இவ்வாறு கமிஷனர் பேசினார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் நிலைக்குழுத் தலைவர் யோகேந்தர் சந்தோலியா பேசுகையில், “வீட்டு வரி உயர்வு திட்டம் நிராகரிக்கப்படுகிறது“‘ என்று அறிவித்தார். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “நிலைக்குழு தலைவரின் அறிவிப்பு முறைப்படியானது அல்ல. இதுதொடர்பான வரி மதிப்பீட்டுக் குழு கூடித்தான் வீட்டு வரி உயர்வை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை கூடி முடிவு செய்யும். அதன்பின்னர்தான் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்” என்றனர்.
டெல்லி மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட் மதிப்பீடு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா நேற்று தாக்கல் செய்தார். அருகில் நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா.