தினமணி 09.11.2009
2012-ல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
தருமபுரி மாவட்டம் பருவதனஹள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழாவில், பயனாளிக்கு வீட்டுச் சாவியை வழங்குகிறார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தருமபுரி, நவ. 8: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 2012-ல் திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள பருவதனஅள்ளி கிராமத்தில் ரூ.1.59 கோடி மதிப்பிலான பெரியார் நினைவு சமத்துவபுரத்தை மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
தொடர்ந்து, 55,221 பயனாளிகளுக்கு ரூ.31.74 கோடி மதிப்பிலான இலவச நலத் திட்ட உதவிகளை வழங்கியும், ரூ.56.75 கோடியில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.29.82 கோடி மதிப்பிலான பணிகளைத் தொடங்கிவைத்தும் அவர் பேசியது:
ரூ.616 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைப் போன்று, ரூ.1,330 கோடியில் தொடங்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் 2012-க்குள் திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும்.
முதல்கட்டமாக சுத்திகரிப்புப் பணிகளுக்காக 9 நிறுவனங்கள் நவ. 2-ம் தேதி முதல் ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளன. 2-ம் கட்டப் ஒப்பந்தப் பணிகள் நவ. 21-ம் தேதியும், 3-ம் கட்ட பணிகள் நவ. 31-ம் தேதியும் மேற்கொள்ளப்படும். ஒசூரில் தொடங்கப்படும் 4-ம் கட்டப் பணிகளுக்காக டிச. 20-ம் தேதி ஒப்பந்தம் திறக்கப்படும், 5-ம் கட்டப் பணிகளுக்காக டிச. 29-ம் தேதி ஒப்பந்தம் திறக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 145 சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டுக்குள் மேலும் 95 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும். 2009-10ம் ஆண்டு இறுதிக்குள் 30 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும்.
1997-ம் கட்டப்பட்ட சமத்துவபுர வீடுகள் பராமரிப்புக்காக ரூ.14.50 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் 45,661 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 65 லட்சம் மகளிர் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு 18,959 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் ரூ.2,322 கோடி சேமித்துள்ளனர். இவர்களுக்கு வங்கி மூலம் ரூ.6,399 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2008-09ல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11,132 கோடியை வங்கிகள் வழங்கியுள்ளன. இவற்றில் 20 சதவீதம் கடன் தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.