மாலை மலர் 4.11.2009
பிளாஸ்டிக் கழிவு இல்லாமல் அம்பத்தூர் தொழில்பேட்டை நவீன நகரம் ஆகிறது; 2015க்குள் செயல்படுத்த திட்டம்
சென்னை, நவ. 4-
அம்பத்தூர் தொழில்பேட்டை 1500 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஆடைகள் தயாரிப்பு, இரும்பு தொழில்கள், கட்டிட நிறுவனங்கள் என 1500-க்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் உள்ளன.
இதுதவிர டி.வி.எஸ். ரானே, முருகப்பா, டன்லப், ஆவின் என பிரபலமான வர்த்தக நிறுவனங்களும் இங்கு அமைந்துள்ளன. இங்குள்ள தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 2500 கோடி ரூபாய். 25 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் இங்கிருந்து ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பெருமளவில் பிளாஸ்டிக்கழிவுகள் குவிகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது.
எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையை பிளாஸ்டிக்கழிவு இல்லாத நவீன நகரம் ஆக்க திட்ட மிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் இதை செய்து முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
“நவீ மும்பை” என்ற அமைப்பு, அந்த மாநிலத்தில் நவீன தொழில் நகரங்களை உருவாக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு இல்லாத நவீன தொழிற்பேட்டைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 5 பேர் கொண்ட குழு அம்பத்தூரில் இருந்து புனே சென்று அங்குள்ள நவீன தொழில் பேட்டைகளை பார்வையிட்டு திரும்பி உள்ளது.
அம்பத்தூர், திருமுடிவாக்கம், திருமழிசை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்க உயர்தர நவீன துணை நிறுவனங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரூ.47.20 கோடி செலவில் நவீன மயம் ஆகும் அம்பத்தூர் தொழில்பேட்டை வளர்ச்சி திட்டத்துக்கு தற்போது ரூ.36.66 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.