தினமலர் 10.03.2010
குடிசை மேம்பாட்டு திட்டம் ரூ.20.88 கோடி நிதி ஒதுக்கீடு
அருப்புக்கோட்டை: ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு மத்திய அரசு 20.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் குடிசை வீடுகளை மாற்றி “கான்கிரீட்‘ வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு மானியத்துடன் கூடிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி நகராட்சியில் 12 குடிசை பகுதிகளில் 879 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 250 சதுர அடியில் ஒரு வீடு கட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் நிதி தரப்படும். இதில் மத்திய அரசு 80 ஆயிரம் ரூபாய் மானியமும், மாநில அரசு 10 ஆயிரம் ரூபாய் மானியமும் வழங்குகிறது. மீதத் தொகையை பயனாளிகளிடம் பெற்று வீடு கட்டி தரப்படும். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூர் பரிந்துரையின்பேரில் மத்திய அரசு 20.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த வீடுகள் கட்டப்படும் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். வீடு கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என நகராட்சி தலைவர் சிவபிரகாசம் தெரிவித்தார்.