தினமலர் 06.05.2010
விரைவில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: மாவட்டத்தில் 21 இடம் நிரப்ப முடிவு
சேலம்: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி காலி இடங்களுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. மாவட்ட வாரியாக காலியிடம் குறித்த விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் சேகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் 21 பதவிகள் காலியாக உள்ளன. தமிழகத்தில் 2006 அக்டோபரில் உள்ளாட்சி பதவிகளுக்கான பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்தது. தலைவர் மற்றும் கவுன்சிலராக இருந்தவர்கள் மரணம் அடைந்தது, ராஜினாமா செய்தது, கட்சி தாவல் என ஏப்ரல் 30 வரை எடுத்த கணக்கீட்டின்படி 600க்கும் மேற்பட்ட பதவிகள் காலியாகி உள்ளன. ஜூனில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக காலி பதவியிடங்கள் குறித்த விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் சேகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சி, 20 ஊராட்சி ஒன்றியங்கள், 19 பேரூராட்சி, 385 ஊராட்சிகள் உள்ளன. தற்போதைய கணக்கீட்டுப்படி 21 பதவிகள் இங்கு காலியாக உள்ளன. அதன் விபரம்: சேலம் மாநகராட்சியில் காலி பதவிகள் இல்லை. ஆத்தூர் நகராட்சியில் 28வது வார்டு கவுன்சிலர் பதவி காலியாக உள்ளது. தெடாவூர் பேரூராட்சியில் 3வது வார்டு, அரசிராமணி பேரூராட்சியில் 2வது வார்டு, இடைப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 8வது வார்டு கவுன்சிலர் பதவியிடங்களும் காலியாக இருக்கின்றன. காடையாம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி, தலைவாசல் ஒன்றியம் கவர்பனை, ஏற்காடு ஒன்றியத்தில், ஏற்காடு ஊராட்சி என மூன்று ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. கோணசமுத்திரம் 4வது வார்டு, அமரகுந்தி 3வது வார்டு, தும்பிபாடி 4வது வார்டு, அரசநத்தம் 1வது வார்டு, சார்வாய்ப்புதூர் 1வது வார்டு, வடுகப்பட்டி 1வது வார்டு, பச்சமலை 3வது வார்டு, மல்லிக்குட்டை 1வது வார்டு, ஏளூர் 4வது வார்டு, நாரணம்பாளையம் 2வது வார்டு, குண்டுக்கல் 1வது வார்டு, எடையப்பட்டி 4வது வார்டு, செம்மணப்பட்டி 1வது வார்டு, புல்லாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் 2வது வார்டு உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக இருக்கிறது.
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறுகையில், ”ஆறு மாதத்துக்கு ஒரு முறை காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். ஏப்ரல் 30ம் தேதி வரை எடுத்த கணக்கில் மாவட்டம் முழுவதும் 21 பதவிகள் காலியாக உள்ளன. மாநில தேர்தல் ஆணையத்துக்கு அவ்வப்போது காலியிட விபரங்களை அனுப்பி வருகிறோம். கடந்த அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட்டது, அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படலாம். உள்ளாட்சி பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன,” என்றார்.