தினமணி 12.11.2009
மறைமுக வரி வருவாய் 21% சரிவு
புது தில்லி, நவ. 11: சர்வதேச பொருளாதார தேக்க நிலை மற்றும் அரசு அறிவித்த வரிச் சலுகை காரணமாக அரசின் மறைமுக வரி வருவாய் 21 சதவீதம் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான 7 மாத காலத்தில் அரசுக்கு ரூ. 1.26 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் கிடைத்த வரி வருமானம் ரூ. 1.61 லட்சம் கோடியாகும்.
உற்பத்தி வரி, சுங்க வரி மற்றும் சேவை வரி ஆகிய மூன்றும்தான் மறைமுக வரியாகக் கருதப்படுகிறது. இம்மூன்று இனங்களில் அரசின் வரி வருவாய் பெருமளவு குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
சுங்க வரி வருவாய் 31.8 சதவீதம் குறைந்து ரூ. 45,412 கோடியானது. தேக்க நிலை காரணமாக இறக்குமதி குறைந்ததால் சுங்க வரி வருவாய் குறைந்தது. மேலும் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைவும் இதற்கு முக்கியக் காரணமாகும்.உற்பத்தி வரி 18.8 சதவீதம் குறைந்து ரூ. 52,566 கோடியானது.
பொருளாதார தேக்க நிலை காரணமாக பிற வரி இனங்களில் பெருமளவு வருவாய் குறைந்தபோதிலும் சேவைத் துறையில் 5.4 சதவீத அளவுக்கே குறைந்து ரூ. 28,926 கோடி வருமானம் எட்டப்பட்டது.சர்வதேச பொருளாதார தேக்க நிலையிலிருந்து உள்நாட்டு தொழில் நிறுவனங்களைக் காக்க அரசு இரண்டு கட்டமாக வரிச் சலுகை அளித்தது. இதன்படி உற்பத்தி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டது. சேவை வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டது. இதுவும் வரி குறைவுக்கு முக்கியக் காரணமாகும்.
அக்டோபர் மாதத்தில் வரி வருமானம் 13 சதவீதம் குறைந்தது. முந்தைய மாதங்களைக் காட்டிலும் அக்டோபர் மாதத்தில் மிக அதிக அளவில் குறைந்துள்ளது.
சுங்க வரி வருமானம் 18 சதவீதம் குறைந்து ரூ. 7,505 கோடியானது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வரி வருமானம் ரூ. 8,952 கோடியாக இருந்தது. சேவை வரி வருவாய் 11.6 சதவீதம் குறைந்து ரூ. 5,736 கோடியானது.
நடப்பு நிதி ஆண்டில் வரி வருவாய் ரூ. 2.70 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது முதல் ஏழு மாதங்களில் கிடைத்த வருவாய் 47.4 சதவீதமாகும்.வரிச் சலுகை காரணமாக அரசின் வரி வருவாய் குறைந்து வருவதால் இதை எப்போது திரும்பப் பெறுவது என்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த விஷயத்தில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அடுத்த நிதி ஆண்டில் வரிச் சலுகைகள் விலக்கிக் கொள்ளப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் சர்வதேச அளவில் தேக்க நிலை மாறும் வரை வரிச் சலுகைகள் தொடரும் என நிதியமைச்சர் பிரணாப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.