தினமணி 17.11.2009
குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண ரூ. 21 லட்சம் ஒதுக்கீடு
கரூர், நவ.16: இனாம்கரூர் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ. 21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் நகராட்சித் தலைவர் வெ. கவிதா. இனாம்கரூர் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சித் தலைவர் வெ.கவிதா தலைமை வகித்தார். துணைத்தலைவர் ல. தங்கவேல், செயல் அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
கவுன்சிலர் எஸ். காமராஜ்: 10-வது வார்டு பகுதியில் 58 வீடுகள் தலா ரூ. 1.05 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது. இதில், 36 வீடுகளுக்குப் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கு பல்வேறு காரணங்களைக் கூறியும், செயல் அலுவலர் மாற்றமும் காரணமாகக் கூறப்படுகிறது. மீதுமுள்ள வீடுகளுக்கும் உடனடியாக நிதி வழங்க வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் செயல் அலுவலர். கவுன்சிலர் மு. தங்கவேல்: வார்டு பகுதிகளிலுள்ள மின் கம்பங்கள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. இவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: அடுத்த கூட்டத்திற்குள் கணக்கெடுப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் த. காளியம்மாள்: தற்போது பெய்த மழையினால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து பகுதிகளும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 263 தெருக்களுக்கு முதல் கட்டமாக 100 தெருக்களுக்கு ரூ. 5 லட்சத்தில் பெயர்ப் பலகை பொருத்துவது, வாங்கப்பாளையம், சின்னகுளத்துப்பாளையம், பெரியகோதூர் பகுதிகளில் தலா ரூ. 25 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டுவது, ரூ. 19.5 லட்சத்தில் தார்ச் சாலை பழுதுபார்ப்பு, சிமென்ட், தார்த் தளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“வாங்கல் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் ஜெனேரட்டர் ரூ. 21 லட்சத்தில் பொருத்தி பணிகளைப் பராமரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் இனாம்கரூர் நகராட்சியின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்’ தலைவர் வெ. கவிதா. மேலும், என்.எஸ்.கே. நகர், அண்ணாகாலனி பகுதிகளில் தலா ரூ. 4 லட்சத்தில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. கூட்டத்தில், கவுன்சிலர்கள் சே. ஜமுனா, க. ரவி, கு. ரேவதி, ரா. செüந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.