தினமலர் 02.02.2010
சமுதாய கூடம், ரேஷன் கடை கட்ட ரூ.21 லட்சம் ஒதுக்கீடு
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் நான்கு இடங்களில் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் 21 லட்சம் செலவில் புதிதாக அங்கான்வாடி மையம், சமுதாய கூடம், ரேஷன் கடை கட்ட, நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
வேலம்பாளையம் நகராட்சி 14வது வார்டில் சிறுபூலுவப்பட்டி அருகே வ.உ.சி., நகரில் 17 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம்; இதில், 13 லட்சம் ரூபாய் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியும், நகராட்சி சார்பில் நான்கு லட்சம் நிதியும் அடங்கும். 15வது வார்டு ரங்கநாதபுரம் பகுதியில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கான்வாடி மையம்; 19வது வார்டில் ஆசிரியர் குடியிருப்பு பின்புறம் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கான்வாடி மையம்; எட்டாவது வார்டு பெரியார் காலனியில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை என 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு, எம்.எல்.ஏ., கோவிந்தசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டார்.
பின் அவர் கூறுகையில், “”புதிதாக கட்டப்படும் நகராட்சி கட்டடத்தின் முழு தோற்றமும் தெரியும் வகையில், ரோட்டின் முன்புறம் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். மெயின் ரோட்டில் இருந்து பார்க்கும் போது, கட்டடம் “பளீச்‘ என தெரியும் வகையில் முன்புறம் உள்ள கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்,” என்றார். நகராட்சி தலைவர் மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம், செயற்பொறியாளர் மல்லிகை உட்பட பலர் உடனிருந்தனர்.