மாலை மலர் 14.09.2010
கருணை அடிப்படையில் குடிநீர் வழங்கல் வாரியத்தில் 218 வாரிசுதாரர்களுக்கு வேலை மு.க. ஸ்டாலின் ஆணை வழங்கினார்
சென்னை, செப். 14- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புகின்ற வகையில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு ஜூலை 2007 முதல் டிசம்பர் 2008 வரை 7 இளநிலை உதவியாளர்களும், 2 தட்டச்சர்களும், 189 களப்பணியாளர்களும் ஆக மொத்தம் 198 பேர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 2006-ல் துணை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் பதவிக்கு ஒருவரும், 2007-ல் 50 உதவிப் பொறியாளர்களும், 2008-ல் 3 வரைவாளர்களும் மற்றும் 3 ஆய்வக தொழில்நுட்பப்பணியாளர்களும், 2009-ல் 13 உதவிப் பொறியாளர்களும், நடப்பாண்டு 2010-ல் 65 உதவிப் பொறியாளர்களும், 21 கனரக ஊர்தி ஓட்டுநர் களும், 33 இளநிலை உதவியாளர்களும், 32 பணிமனை மேலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை முதல்–அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கருணை அடிப்படையில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 7 இளநிலை உதவியாளர்கள், ஒரு தட்டச்சர், 2 வரைவாளர்கள், ஒரு உயர் அழுத்த மின் கருவி இயக்குபவர், 207 களப்பணியாளர்கள் என மொத்தம் 218 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இன்று வழங்கப்பட்டுள்ள 218 பணி நியமன ஆணைகளையும் சேர்த்து, சென்னைப்பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 637 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அரசுப்பணிகளில் தேவையான அளவு புதியப்பணியிடங்களை ஏற்படுத்துவதிலும், ஏற்கனவே உள்ள பணியிடங்களிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு வதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு, அரசு திட்டங்களின் பலன் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையிலும், நிர்வாகத்திறனை மேம்படுத் திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் அஷோக்வர்தன் ஷெட்டி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர், சிவ்தாஸ் மீனா மற்றும் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.