22 ஆண்டுகளுக்கு பிறகு தாராபுரம் நகராட்சியில் 100 சதவீதம் வரிவசூல் ரூ.4 கோடியே 70 லட்சம் குவிந்தது
தாராபுரம் நகராட்சியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு 100 சதவீதம் வரிவசூலானது. இதன்படி ரூ.4 கோடியே 70 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது.
நகராட்சியில் வரி வசூல்
தாராபுரம் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பஸ் நிலைய கடைகள் குத்தகை, தினசரி மார்க்கெட் வாடகை கட்டணம் உள்பட பல்வேறு வரியினங்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது. தாராபுரம் நகராட்சியில் மொத்தம் 14 ஆயிரத்து 581 வரியினங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 4 லட்சத்து 47 ஆயிரம் கிடைக்கிறது. அரசு ஊழியர்கள் 4,283 பேரும், வியாபாரிகள் மற்றும் தொழில் செய்வோர் 937 பேரும், தொழில் வரியாக ரூ.43 லட்சத்து 92 ஆயிரத்து 654ம் செலுத்துகிறார்கள். நகர் முழுவதும் உள்ள 8 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் மூலம் ரூ.51 லட்சத்து 51 ஆயிரம் குடிநீர் கட்டணமாக கிடைக்கிறது. அனைத்து வரியினங்கள் மூலம் தாராபுரம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.4 கோடியே 70 லட்சம் வருமானம் கிடைக்கிறது
22 ஆண்டுகளுக்கு பிறகு
இந்த ஆண்டு அனைத்து வரியினங்களும் முழுமையாக கடந்த 17ந் தேதி வசூல் செய்யப்பட்டது. தொழில்வரி ரூ.43 லட்சத்து 92 ஆயிரத்து 654 நேற்று மாலையுடன் வசூலானது. குடிநீர் கட்டண தொகையும் வசூலாகி விட்டது. கடந்த 1991ம் ஆண்டுதான் தாராபுரம் நகராட்சியில் 100 சதவீதம் வரி வசூலானது. அதன்பிறகு 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் 100 சதவீத வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மார்ச்31 ந் தேதிக்கு முன்பே 100 சதவீதம் தாராபுரம் நகராட்சியில் வரிவசூலாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதையடுத்து 100 சதவீத வரி வசூல் செய்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நகராட்சி தலைவர் கலாவதி மற்றும் ஆணையாளர் சரவணக்குமார் ஆகியோர் பாராட்டினார்கள். 100 சதவீதம் வரிவசூல் செய்த மேலாளர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் எம்.செல்வராஜ், உதவி ஆய்வாளர்கள் அய்யாசாமி, கலீல் ரகுமான், நாகராஜ், சிவக்குமார், ராஜா, யோகேஸ்வரன், ரூபா, ராஜேஸ், சுப்பிரமணி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.