தினகரன் 01.06.2010
பாதாள சாக்கடை திட்டத்தால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.2.20 கோடி நிதி
வேலூர், ஜூன் 1: பாதாள சாக்கடை திட்டப்பணியால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.2.20 கோடி நிதி வழங்க வேண்டும் என்று நகராட்சிகள் நிர்வாக இயக்குனருக்கு வேலூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மேயர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை மேயர் முகமதுசாதிக் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
சீனிவாசகாந்தி: குடிநீர் தட்டுப்பாடு தீர்க்க இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?.
மேயர் கார்த்திகேயன்: ஓட்டேரியில் 4 போர்வெல்கள் போடப்பட்டுள்ளது.
சீனிவாசகாந்தி: குடிசைப்பகுதிகளில் காலாவதியான பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். புதிய பஸ் நிலைய பகுதிகளில் ஓட்டல்களில் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமான விலைக்கு உணவு பொருட்களை விற்கிறார்கள்.
மேயர்: ஆய்வு செய்யலாம்.
நீதி(எ)அருணாசலம்: குடிநீர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
பொறியாளர் தேவகுமார்: 8 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
பாபு: தோட்டப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் 486 மதிப்பெண்கள் பெற்ற மாணவியை பாராட்டி அவருக்கு எனது சிட்டிங் பீஸை வழங்குகிறேன்.
(அவர் தனக்கு வழங்கப்பட்ட சிட்டிங் பீஸை மேயரிடம் வழங்கினார்.)
மேயர்: பாபுவுக்கு மாணவியின் சார்பில் நன்றி.
பாலசுந்தரம்: குடிநீர் எங்கள் வார்டில் ஒன்றேகால் மணி நேரம்தான் வருகிறது.
மேயர்: நாளை உட்கார்ந்து பேசலாம்.
ஜெயபிரகாஷ்: புதிய பஸ் நிலைய கடைகளை எப்போது ஏலம் விடுவீர்கள்?
மேயர்: கோவையை போல புதிய பஸ் நிலையத்தை மாற்ற உள்ளதால் கடைகள் இடிக்கப்பட உள்ளன.
செந்தில்: ஆர்.என்.பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கூறியபடி பீடர் லைன் போட வேண்டும்.
அசேன்: சாரதிமாளிகை நடைபாதை வியாபாரிகளுக்கு பில்டர்பெட் ரோடில் கடைகள் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.