தினமலர் 03.03.2010
வாலாஜாவில் ரூ. 22.5 லட்சத்தில் நமக்குநாமே திட்டத்தில் நடைபாதை
வாலாஜாபேட்டை:வாலாஜாபேட்டையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைபாதை அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. வாலாஜாபேட்டை நகரில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை, நகராட்சி, காவல்துறை ஒருங்கிணைந்து முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக காவல் துறையின் சார்பில் அனைத்துக் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் அடங்கிய நகர நலக்குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் முடிவின்படி காசிவிஸ்வநாதர் கோயில் முதல் பவர்னர் தெரு வரையில் எம்.பி.டி. சாலையின் இருபுறமும் பேரிகாட் அமைத்து, நடைபாதை அமைக்கவும், பொதுமக்களின் பங்களிப்பு ரூ.7.50 லட்சத்துடன் அரசு பங்களிப்பு தொகை ரூ.15 லட்சம் சேர்த்து ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதன் பேரில் அரசு ரூ.22.50 லட்சம் தொகையை ஒதுக்கீடு செய்து பணி செய்வதற்கான நிர்வாக அனுமதியையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி சேர்மன் நித்தியானந்தம் கூறுகையில் நடைபாதை அமைக்கும் பணி இந்த வாரத்தில் தொடங்கப்படும். பணி முடிந்தவுடன் வாலாஜா மற்ற நகரங்களை காட்டிலும் ஒரு மாதிரி நகரமாக வியாபாரிகள், பொதுமக்கள் பாராட்டும் வகையில் இருக்கும், அதற்காக எம்.எல்.ஏ., காந்தி, கலெக்டர் ராஜேந்திரன் மற்றும் நகர நலக்குழுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.