தினமலர் 15.09.2010
ரூ.22.75 கோடியில் புதிய குடிநீர்திட்டம்: நகராட்சி சேர்மன் தகவல்
திருச்செங்கோடு: “”திருச்செங்கோடு நகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 22.75 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது,” என, நகராட்சி சேர்மன் நடேசன் கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:திருச்செங்கோடு நகராட்சி 25.2 சதர கி.மீ., பரப்பளவு கொண்டது. 33 வார்டுகள் கொண்ட இங்கு ஒரு லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்திருந்தும் குடிநீர் பிரச்னை நீடித்து வருகிறது. வார்டுகளுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யமுடியாத நிலையில், பொதுமக்கள் கண்டன ஆர்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர்.
நகராட்சி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 22.75 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு நிதிஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கி உள்ளது. இத்திட்டம் காவிரி ஆற்றில் சமயசங்கிலி தடுப்பணையில் துவங்கி ஆவத்திபாளையம், கருமாபுரம் வழியாக திருச்செங்கோட்டில் முடிகிறது.நகரில் சந்தைப்பேட்டையில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளும், சண்முகாபுரம், அம்பேத்கார் நகர் மற்றும் வாலறைகேட் ஆகிய இடங்களில் தலா ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும் அமைக்கப்படுகிறது. நகரில் உள்ள 33 வார்டுகளிலும் 92.33 கி.மீ., நீளத்திற்கு புதிய குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கப்படுகிறது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் திருச்செங்கோடு நகராட்சியின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.நகராட்சி கமிஷனர் இளங்கோவன், பொறியாளர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.