தினமணி 08.02.2010
போலியோ சொட்டு மருந்து முகாம் 2.3 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது
திருவண்ணாமலை, பிப்.7: திருவணணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் மொத்தம் 2.3 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் கடந்த 14 ஆண்டுகளாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 1129 முகாம்கள், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 693 முகாம்கள் என மொத்தம் 1822 முகாம்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திருவணணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 7541 பணியாளர்கள் முகாமில் பங்கேற்றனர்.
சுகாதார இணை இயக்குநர் டாக்டர் ராமலிங்கம், மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சித்ரா, மருத்துவ அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி, வட்டாட்சியர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சில நாள்கள் வீடு வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.
வந்தவாசி
வந்தவாசி பகுதியில் 23,766 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்கென வந்தவாசி வட்டாரத்தில் 101 மையங்களும், தெள்ளார் வட்டாரத்தில் 86 மையங்களும், வந்தவாசி நகராட்சி சார்பில் 15 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
வந்தவாசி வட்டாரத்தில் 10,676 குழந்தைகளுக்கும், தெள்ளார் வட்டாரத்தில் 8,950 குழந்தைகளுக்கும், வந்தவாசி நகராட்சி பகுதியில் 4,140 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
வந்தவாசி பஸ்நிலையத்தில் நடைபெற்ற முகாமை வந்தவாசி எம்எல்ஏ ஜெ.கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி நகராட்சித் தலைவர் க. சீனுவாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆரணி
ஆரணி நகர், ஆரணி ஒன்றியம், மேற்குஆரணி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போலியோ முகாம்களில் 25,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
ஆரணி அரசு மருத்துவமனையில் ஆரணி எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் எம்.என்.ராமலிங்கம், முன்னாள் பால்வளத்தலைவர் ஏ.செல்வரசு, தலைமை மருத்துவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.