தினகரன் 03.06.2010
ரூ.23 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் ஆற்காடு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ஆற்காடு, ஜூன் 3: ரூ.23 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆற்காடு நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. துணைத் தலைவர் பொன். ராஜசேகர், ஆணையாளர் செ. பாரிஜாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
நந்தகுமார் (பாமக): பாரதிதாசன் சாலையை முழுவதும் போடவேண்டும். பஸ் நிலையம், டெலிபோன் மற்றும் மின் கம்பங்களில் விளம்பர நோட்டீஸ்களை ஒட்டி அசிங்கப்படுத்துகிறார்கள். இதை தடுக்க வேண்டும்.
தலைவர்: பாரதிதாசன் சாலையை முழுவதும் போட நடவடிக்கை எடுக்கப்படும். மின் கம்பங்களில் நோட்டீஸ்கள் ஒட்டும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
பூங்காவனம் (பாமக): மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை சில வியாபாரிகள் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள். அதனை சாப்பிடுவதால் உடல் பாதிப்படைகிறது.
தலைவர்: இதுகுறித்து திடீர் சோதனை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பின்னர் நடந்த கூட்டத்தில் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக முதல்வர், ஓராண்டு பணி நிறைவு செய்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் ரூ. 23.20 லட்சத்தில் சிறுபாலங்கள், சிமெண்ட் சாலை, ஆழ் துளை கிணறு, கூடுதல் பள்ளிக்கட்டிடம் ஆகிய திட்டப்பணிகளை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.