தினகரன் 11.11.2010
ரூ23 கோடி நிலுவை வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி எச்சரிக்கை
திருப்பூர், நவ.11: திருப்பூர் மாநகரில் ரூ23 கோடி அளவுக்கு வரியினங்கள் நிலுவையில் உள்ள நிலை யில், வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மாநகரில் நடப்பாண்டுக்கான (2010&11) சொத்து வரி ரூ24 கோடி; குடிநீர் கட்டணம் ரூ5 கோடி, தொழில் வரியாக ரூ1.5கோடி மற்றும் வரி யில்லா கட்டணமாக ரூ1.70 கோடி உட்பட சுமார் ரூ33 கோடிக்கும் அதிகமான வரியினங்கள் மற்றும் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டியிருந்தது. இது தவிர கடந்தாண்டுக்கான நிலுவைத் தொகையும் வசூ லிக்க வேண்டியுள்ளது.
இதில் இதுவரை சொத்து வரி ரூ7 கோடி; குடிநீர் கட்டணம் ரூ1.70 கோடி; தொழில் வரி ரூ50 லட்சம், வரியில்லா கட்ட ணம் ரூ90 லட்சம் என ரூ10 கோடி அளவுக்கு வரியினங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் ரூ23 கோடி அளவுக்கு வரியினங்கள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வரியின நிலுவை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளை நேற்று துவக்கியது. மாந கரில் உள்ள 52 வார்டுகளி லும் வரி வசூலிப்புக்கென தனிக்குழு அமைக்கப்பட்டு, வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஜெயலட்சுமி கூறுகையில், ‘’திருப்பூர் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரியினங்கள் வசூலிப்பில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அதன்படி வரியினங்களை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று (நேற்று) முதல் வரியினங்கள் செலுத்தாதவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, இணைப்பை துண்டிக்கும் பணி துவங்கியுள்ளது. உடனடியாக நிலுவை வரியினை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும்,” என் றார்.