குடிநீர் கட்டணம் செலுத்தாத 238 வீடு, கடைகளின் இணைப்பு துண்டிப்பு
கடலூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ள 238 வீடு மற்றும் கடைகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
கடலூர் நகராட்சியில் குடிநீர் கட்டணமாக ஒரு இணைப்புக்கு மாதம்தோறும் ரூ.40 வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் இந்த கட்டணத்தைச் செலுத்தாமல் மாதக்கணக்கில் பாக்கி வைத்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இதை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பின்னரும் பலன் இல்லாததால் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ள வீடு, கடைகளின் இணைப்புகளைத் துண்டிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஆணையர்(பொறுப்பு) ரவி கூறியது:
கடலூர் நகராட்சியில் 11,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் 50 சதவீதம் பேர் குடிநீர் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர். மீதி 50 சதவீதம் பேர் பாக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.5 கோடி குடிநீர் கட்டணம் வசூல் செய்ய வேண்டி உள்ளது.
குடிநீர் கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு கேட்பு அறிவிப்பு, ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுதல் போன்ற நடவடிக்கைளை மேற்கொண்ட பின்னரும் குறித்த காலத்துக்குள் பணத்தைச் செலுத்தாததால் குடிநீர் இணைப்பைத் துண்டிக்கிறோம். இதுவரை 238 குடிநீர் இணைப்புகளைத் துண்டித்துள்ளோம். இந்த நடவடிக்கை தொடரும் என்றார்.