தினத்தந்தி 01.10.2013
அரியநாயகிபுரம் குடிநீர் திட்டத்துக்கு ரூ.239 கோடி நிதி
ஒதுக்கீடு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தகவல்
நெல்லை மாநகர பகுதி மக்களுக்காக அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து
கொண்டு வரப்படும் புதிய குடிநீர் திட்டத்துக்கு ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு உள்ளது என நெல்லையில் நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில்
மேயர் விஜிலா சத்யானந்த் தெரிவித்தார்.
மாநகராட்சி கூட்டம்
நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் விஜிலா சத்யானந்த் தலைமையில் நேற்று
மாலை நடந்தது. துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், ஆணையாளர் த.மோகன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கிய தொடங்கி உடன் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர்
படித்தார். அப்போது அவர் பேசும் போது, “அம்மா குடிநீர் திட்டத்தையும்,
தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தால், பழுதடைந்த அடுக்குமாடி கட்டிடத்தை
இடித்து விட்டு ரூ.280 கோடியில் புதிய அடுக்கு மாடி கட்ட உத்தரவிட்டதற்கும்
முதல்–அமைச்சருக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது“ என்று கூறினார்.
தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–
நிதி பற்றாக்குறை
பிரான்சிஸ் (தி.மு.க.):– மாநகராட்சியில் எப்போது இல்லாத அளவுக்கு
தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. மாநகராட்சி பணிகளை முடித்த
ஒப்பந்தகாரர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. சுமார் 6 கோடி வரை பணம்
பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் இருக்கிறது என
ஒப்பந்தக்காரர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள நிதி
பற்றாக்குறைக்கு காரணம் என்ன?
மேயர்:– சொத்துவரி, குடிநீர் வரி போன்றவைகள் வசூல் செய்ய வேண்டியது
இருக்கிறது. மேலும் பொதுநிதி கடந்த 4 மாதங்களாக சரியாக வசூல் செய்ய
முடியவில்லை. சுமார் ரூ.40 கோடி வரை வசூல் செய்ய வேண்டியது உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பணிக்காக மாநகராட்சி பணியாளர்கள் சென்று வருகிறார்கள். 6
மணி நேரம் தேர்தல் பணியையும், 2 மணி நேரம் மாநகராட்சி பணியையும் கவனித்து
வருகிறார்கள். நிதி வசூல் செய்வதில் தேக்கம் ஏற்பட்டு உள்ளது. பற்றாக்குறை
என்று சொல்ல முடியாது.
பிரா£ன்சிஸ்:– மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாத அம்மா
உணவகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு மாதத்துக்கு ரூ.36 லட்சம்
வரை ஒதுக்கப்படுகிறது. தொடர் செலவீனங்களுக்காக நிதி ஒதுக்கும் போது
பற்றாக்குறை ஏற்பட தானே செய்யும்.
ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு
மேயர்:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா நெல்லை மாநகராட்சிக்கு தேவையான நிதியை
ஒதுக்கி தருகிறார். அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து நெல்லை மாநகர
பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் புதிய திட்டத்தை முதல்–அமைச்சர்
சட்டசபையில் அறிவித்தார். தற்போது அந்த திட்டத்துக்காக ரூ.239 கோடியை நிதி
ஒதுக்கி உள்ளார்.
மேலும், பாளையங்கோட்டை இலந்தை குளத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க
ரூ.19 கோடியும், நயினார் குளத்தை சீரமைத்து அபிவிருத்தி செய்ய ரூ.4½
கோடியும் ஒருங்கிணைந்த நகர்புற திட்டத்தில் முழு மானியமாக நிதி ஒதுக்கி
உள்ளார். இதுபோல் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி தந்து இருக்கிறார்.
நெல்லை மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக மாற்றக் கூடிய திட்டங்களை
அறிவித்து இருக்கிறார்.
தி.மு.க. வெளிநடப்பு
பிரான்சிஸ், பேசுவதற்கு எழுந்தார். அனுமதி மறுக்கப்பட்டது. உடனே
தி.மு.க. கவுன்சிலர்கள் மேயர் முன் இருக்கையில் இருந்து பேசினார்கள்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். இதனால்
கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பேச அனுமதிக்காததை
கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.
ஆயிஷா பானு (அ.தி.மு.க) பேசும் போது, “நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில்
இருந்து ரெயில்வே கேட் வரையிலும் உள்ள சாலையை காயிதே மில்லத் சாலை என பெயர்
மாற்றம் செய்ய வேண்டும்“ என்றார்.
ஆதரவற்றோர் தங்கும் விடுதி
பரணி சங்கரலிங்கம்:– நெல்லை சிந்துபூந்துறை சாலைத்தெருவில் உள்ள
மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிழக்கு பகுதியில் உள்ள பழைய கட்டிடம்
உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.30 லட்சம் மதிப்பில்
தெருக்களில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர் தங்கும் விடுதிகளை கட்ட முடிவு
செய்யப்பட்டு உள்ளது. இந்த விடுதிக்கு எங்கள் வார்டு மக்கள் எதிர்ப்பு
தெரிவிக்கிறார்கள். எனவே அங்கு ஆதரவற்றோர் தங்கும் விடுதி கட்டக் கூடாது.
எனது வார்டு பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.
மேயர்:– நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் மாநகராட்சிக்கு சொந்தமான
பழுதடைந்த கட்டிடம் உள்ளது. அங்கு ஆதரவற்றோர் தங்கி விடுதியை கட்டலாம்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது. தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.