தினமணி 30.11.2011
மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.24 கோடி
÷மேலும் வடவள்ளி, குறிச்சி ஆகிய இடங்களில் தலா ரூ.2.5 கோடியில் பஸ் டெர்மினல் அமைக்கப்படுகிறது. வீரகேரளம், குறிச்சி பகுதிகளில் மின்மயானம் கட்டப்படுகிறது.
÷72 வார்டுகளாக இருந்த கோவை மாநகராட்சி தற்போது 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம், குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய 3-ம் நிலை நகராட்சிகள், துடியலூர், வெள்ளக்கிணறு, காளப்பட்டி, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சிகள், விளாங்குறிச்சி ஊராட்சி ஆகிய உள்ளாட்சிகள் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
÷பழைய மாநகராட்சிப் பகுதிக்கும், இணைக்கப்பட்ட பகுதிக்கும் அடிப்படை வசதிகளில் ஏராளமான ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. இணைக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலை, மழைநீர் வடிகால், கழிவுநீர்க் கால்வாய் வசதிகள் கிடையாது. அண்மையில் பெய்த கனமழையில், இணைக்கப்பட்ட மாநகராட்சிப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி வழங்கக் கோரி கோவை மாநகராட்சி சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சாலை, கழிவுநீர்க் கால்வாய், தெருவிளக்கு, மழைநீர் வடிகால் ஆகிய வசதிகளுக்கு முதல் கட்டமாக ரூ.24 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் வடவள்ளி, குறிச்சியில் பஸ் டெர்மினல் அமைக்க தலா ரூ.2.5 கோடியும், வீரகேரளம் மற்றும் குறிச்சியில் தலா ரூ.1.5 கோடியில் மின்மயானம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
÷இணைக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன், மாநகராட்சி ஆணையர் தி.க.பொன்னுசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அனைத்து உதவி ஆணையர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இணைக்கப்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக சாலை அமைப்பதற்கான, மதிப்பீடுகளைத் தயார் செய்து உடனடியாக அனுப்புமாறு அவர் அறிவுறுத்தினார்.
“புதிதாக இணைக்கப்பட்ட மாநகராட்சிப் பகுதிகள் அடிப்படை வசதிகளில், மிகவும் பின்தங்கியிருக்கிறது. இப் பகுதிகளுக்கு முதல்கட்டமாக அளிக்கப்பட்ட தொகையே மிகவும் குறைவாக இருக்கிறது’என்று பொறியியல் பிரிவு அலுவலர்கள் கூறுகின்றனர்.
தார்ச்சாலை அமைக்க ஒரு கிமீ-க்கு ரூ.30 லட்சம் செலவாகிறது. புதிதாக ஒரு தெருவிளக்கு அமைக்க வேண்டும் எனில் ரூ.22 ஆயிரம் ஆகும்.
இதனால் முதல்கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதியில் எந்தப் பணிகளை எடுப்பது என பொறியியல் பிரிவினர் தீவிர ஆய்வில் இருக்கின்றனர்.