தினமலர் 02.02.2010
பார்க்கிங் பகுதியில் கடைகள் 24 மணி நேரத்தில் அகற்ற கெடு
கோவை : தனியார் வணிக வளாகத்தில் வாகன பார்க்கிங் பகுதியை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.சாயிபாபாகாலனி, என்.எஸ்.ஆர்.,ரோடு, மணியம் வேலப்பர் வீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இதன் முன்பகுதி வாகன பார்க்கிங் இடத்தில் மொபைல் போன் கடை, புத்தக கடை, பொக்கே ஷாப் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
பார்க்கிங் பகுதியிலுள்ள கடைகளை அகற்ற, மாநகராட்சி நகரமைப்பு துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது; எனினும், கடைகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
வாகன பார்க்கிங் பகுதியில் இருந்த கடைகளை அகற்றும் நடவடிக்கையை துவக்கினர். இதையடுத்து, மாநகராட்சி கமிஷனரிடம், கடை உரிமையாளர் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில், இடித்து அப்புறப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு நாள் கால அவகாசத்தில் மீதமுள்ள பகுதியை தாங்களாகவே அகற்றிக்கொள்வதாக கடை உரிமையாளர் உறுதி அளித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், “”24 மணி நேரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக்கொள்ளாவிடில் இடித்து அகற்றப்படும்,” என்றார்.