தினமலர் 11.03.2010
ரூ. 24 கோடியில் குளங்களில் சீரமைப்பு பணிகள்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 29 கோடியே 24 லட்ச ரூபாய் செலவில் ஐந்தாண்டில் 52 குளங்கள் சீரமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக நடப்பாண்டில் 3 கோடி ரூபாய் செலவில் 5 குளங்கள் சீரமைக்கப்படுகிறது. இதற்கு திட்டக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வரவுள்ள திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்டம் மூலமாக ஐந்தாண்டு திட்டமாக 29 கோடியே 24 லட்ச ரூபாய் செலவில் குளங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குளங்களின் தூர்வாறும் பணி, கரைகள் பலப்படுத்தும் பணி, வரத்து கால்வாய் சீரமைப்பு பணி, ஷட்டர்கள் சீர் செய்யும் பணி உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
முதல் கட்டமாக நடப்பாண்டில் மருதூர் கீழக்காலில் இசக்கன்குளம் 20 லட்ச ரூபாய் செலவிலும், மருதூர் மேலக்காலில் கால்வாய்குளம் 32 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவிலும், தெற்கு பிரதான கால்வாயில் நல்லூர் மேலக்குளம் 50 லட்ச ரூபாய் செலவிலும், வடக்கு பிரதான கால்வாயில் பழையகாயல் குளம் 28 லட்சத்திலும், ஆறுமுகமங்கலம் குளம் 200 லட்சத்திலும் நடப்பாண்டில் சீர் செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் மொத்தம் 3 கோடியே 30 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் ஐந்து குளங்கள் சீரமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு திட்டக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்ட பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சேர்மன் சின்னத்துரை கூறினார்.
சுகாதாரத்துறையின் கீழ் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 328 பயனாளிகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், வரு முன் காப்போம் முகாம்கள் மொத்தம் 121 நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 125 நடத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா தெரிவித்தார்.
இந்த முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 717 பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் மேல் சிகிச்சைக்காக 855 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இ.சி.ஜி 2 ஆயிரத்து 664 பேருக்கு எடுக்கப்பட்டது. ஸ்கேன் 5 ஆயிரத்து 109 பேருக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வேளாண்மை இணை இயக்குநர் லூயிஸ் ராஜரத்தினம், துணை இயக்குநர் தனசிங் டேவிட், சுகாதார பணிகள் துணை இயக்குநர் உமா, பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட உதவி செயற்பொறியாளர் நிர்மலன் கிறிஸ்துதாஸ், உதவி பொறியாளர் ரகுநாதன், வேளா ண்மை துணை இயக்குநர் முருகானந்தம், நெடுஞ்சாலைத்துறை கிராமச்சாலைகள் கோட்ட உதவி செயற் பொறியாளர் சத்தியமூர்த்தி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அமுதன், உதவி பொறியாளர் கணேஷ்பாபு, திட்டக்குழு உறுப்பினர் சுரேஷ், மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர