தினமணி 27.01.2010
ரூ.2.40 கோடியில் காரைக்குடி நகராட்சிப் பள்ளிகளுக்கான புதிய கட்டடம் திறப்பு
காரைக்குடி,ஜன.25: காரைக்குடியில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 5 நகராட்சிப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் மற்றும் தாய்–சேய் நல விடுதிக்கான கட்டடத்தை தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
ராமநாதன் செட்டியார் நகர்மன்ற நடுநிலைப் பள்ளிக்கு ரூ.80.10 லட்சத்திலும், சுபாஷ் நகர் நகர்மன்ற நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 31.90 லட்சத்திலும், சின்னைய அம்பலம் நகர்மன்ற நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 40.20 லட்சத்திலும்.
நல்லையன் ஆசாரி நகர்மன்றத் தொடக்கப் பள்ளிக்கு ரூ.25.33 லட்சத்திலும், ஆலங்குடியார் நகர்மன்ற நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 23.10 லட்சத்திலும், செஞ்சை நகர்மன்றத் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 21 லட்சத்திலும் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. செஞ்சையில் உள்ள நகராட்சி தாய்-சேய் நல மையம் ரூ. 18 லட்சத்தில் நவீனமயமாக்கப்பட்டு பணிகள் நிறைவுற்றன.
இதனை காரைக்குடி நகராட்சி சார்பில் ராமநாதன் செட்டியார் நகர்மன்ற நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிóல் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திறந்துவைத்தும், நலத் திட்ட உதவிகள் வழங்கியும் பேசியது:
இந் நகராட்சியில் 15 பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணியில் 5 கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் விரைவில் கொண்டு வர துணை முதல்வரைச் சந்தித்த்து தெரிவித்துள்ளோம். மேலும் ரூ.1.18 கோடியில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், சிவகங்கை, தேவகோட்டை நகராட்சிகளும், திருப்பத்தூர் பேரூராட்சியும் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. சிவகங்கையில் ரூ. 97 கோடியில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக் கட்டடப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.
ஆட்சியர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்துப் பேசியது: அரசு நிதியை மட்டுமே எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் நிதியுடன் ஒரு பங்கு அரசு நிதி சேர்த்து நகரின் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிக் கொள்ள தடையேதும் இல்லை. வரும் காலங்களில் நகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
விழாவில், நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை பேசுகையில், காரைக்குடி நகராட்சியில் ரூ.24 கோடிக்கு பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காரைக்குடியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவில் தொடங்க அமைச்சர் ஆவன செய்ய வேண்டும். காரைக்குடி நகர வளர்ச்சிக்காக நடப்பாண்டு சட்டப்பேரவை உறுப்பினர் தனது நிதியிலிருந்து ரூ. 75 லட்சத்தை நகராட்சிக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தர்.
காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம் பேசுகையில், நடப்பாண்டு சட்டப் பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.75 லட்சம் காரைக்குடி நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்குவதாக உறுதியளிக்கிறேன் என்றார்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப. துரைராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் லெ. வைரவன், நகராட்சிப் பள்ளிகளின் சார்பாக தலைமையாசிரியர் நா. காத்தமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினார். ராமநாதன் செட்டியார் நகர்மன்றப் பள்ளி மாணவ, மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.
விழாவில், முன்னாள் அமைச்சர் மு. தென்னவன், தொழிலதிபர் பிஎல். படிக்காசு, காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் முத்து. பழனியப்பன், பேராசிரியர் அய்க்கண், நகராட்சிப் பொறியாளர் எஸ். மணி, இளநிலைப் பொறியாளர் எம். வேலுச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.