தினமலர் 12.05.2010
சத்திரம் நகராட்சிக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் நகராட்சிக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வீரப்பன்சத்திரம் நகராட்சி தலைவர் மல்லிகா கூறியதாவது: குப்பை பிரச்னையை தீர்க்க காவிரிக்கரையில் இருந்து சற்று தள்ளி எட்டு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ப்பை கொட்டி உரம் தயாரிக்கப்படும். ஆரம்பக்கட்ட பணி 28 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. உரம் தயாரிப்பு பணிக்கு 78 லட்சம் ரூபாய் செலவாகும். இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடைந்துவிடும். நகராட்சி குப்பை பிரச்னைக்கும் விடிவு வந்துவிடும்.
உரக்கிடங்கு செல்வதற்கு நகராட்சி சார்பில் தனிப்பாதை அமைக்கும் பணி 45 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. அங்குள்ள கழிவுநீர் ஓடைக்கு மேல் சிறு பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அதன் பிறகு இந்த வழியாக குப்பை லாரிகள் உரக்கிடங்குக்கு செல்ல முடியும். ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதில் 10 லட்சம் ரூபாய் செலவில் 16வது வார்டில் சமுதாயக்கூடமும், மீதமுள்ள 15 லட்சம் ரூபாயில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் நடந்து வருகிறது. குமலன்குட்டையில் நான்கு லட்சம் ரூபாய் செலவில் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. நகராட்சியில் 17 ஆயிரத்து 981 பேருக்கு அரசின் இலவச கலர் ‘டிவி‘ வழங்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 500 பேருக்கு மேல் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2,440 பேருக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.