தினமலர் 03.11.2010
நெல்லை மாநகராட்சியில் ரூ. 25 கோடிரோடு பணிக்கு டெண்டர் தேதியை நீட்டித்தது
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் ரோடு பணிக்கு டெண்டர் போடுவதில் தகராறு ஏற்பட்டதையடுத்து டெண்டர் தேதியை நாளை வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.சட்டசபைத்தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிப்பகுதிகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழுதடைந்த ரோடுகளை சீர்செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சிக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பல வார்டுகளில் சிமென்ட், தார் ரோடுகள் அமைக்கும் பணிகளும் இதில் அடக்கம்.இப்பணிக்கு ஒப்பந்ததாரர்கள் டெண்டர் போடுவதற்கு கடந்த 1ம்தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக அதிக மதிப்பீட்டிலான பணிகளுக்கு டெண்டர் போடும் ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் “சிண்டிகேட்‘ அமைப்பது வழக்கம். குறிப்பிட்ட ஒரு பணிக்கு பல ஒப்பந்ததாரர்கள் டெண்டர் பாரம் வாங்கினாலும் ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற ஓரிருவர் மட்டுமே டெண்டர் போடுவர். அதில் ஒருவருக்கு பணி அளிக்கப்படும்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைவரும் தங்களுக்குள் “பேசி‘ முடித்துக்கொள்வர்.தற்போது சிமென்ட் விலை உச்சத்தில் இருப்பதால் சிமென்ட் ரோடு அமைக்கும் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தார் ரோடு அமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சிமென்ட் ரோடு பணியை சேர்த்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர்.நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு சம்பவத்தன்று ஆளும்கட்சி கவுன்சிலர் காரில் வந்த ஒருவர் முக்கிய வி.ஐ.பி., ஒருவரின் சிபாரிசுப்படி தார் ரோடு பணிக்கு மட்டும் டெண்டர் போட்டுள்ளார். இதனால் அவருக்கும், ஏற்கனவே டெண்டர் போட்ட மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வேறு சிலரும் டெண்டர் போட விடாமல் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. அதிகாரிகள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதுதொடர்பாக மேலிடத்திற்கு தகவல் பறந்தது. இதையடுத்து நெல்லை மாநகராட்சியில் மட்டும் ரோடு பணிக்கு டெண்டர் அளிக்க 4ம்தேதி (நாளை) வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.