தினமலர் 16.11.2010
மாநகர கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.25 கோடி
ஈரோடு:ஈரோடு நகரில் சேரும் குடியிருப்பு கழிவுநீரை பாதாள சாக்கடை குழாய் மூலம் கொண்டு சென்று பீளமேடு என்ற இடத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்படவுள்ளது.ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காசிப்பாளையம், பெரியசேமூர் ஆகிய நான்கு நகராட்சிகள், பி.பி.அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய டவுன் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டன. ஈரோடு மாநகராட்சி எட்டு சதுர கிலோ மீட்டரில் இருந்து 56 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்தது.மாநகராட்சியில் 209.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. ஈரோடு பகுதியில் ஐந்து கழிவு நீரேற்று நிலையம், ஐந்து கழிவுநீர் உந்து நிலையம், 13.195 கிலோ மீட்டர் நீளத்துக்கு உந்து குழாய்கள் அமைக்கப்படவுள்ளன.
அதற்காக, ஈரோடு பெரியார் நகரில் கழிவு நீருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. இங்கிருந்து காந்திஜி ரோட்டில், பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக காலிங்கராயன் வாய்க்காலை அடுத்துள்ள பீளமேடு பகுதிக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படவுள்ளது. இப்பணியை மேற்கொள்ளும் கே.ஆர்.ஆர்., இன்ஃப்ரா ஸ்டிரெக்சர் நிறுவன திட்ட அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது:பெரியார் நகரில் “ஈ‘ பிளாக் எதிரே நீருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. ஈரோடு நகரில் சேரும் கழிவுநீர் இங்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின், பீளமேடு கொண்டு செல்லப்படும். உலக வங்கி நிதியாக 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பீளமேட்டில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படவுள்ளது.குடியிருப்பு பகுதிகளில் குழிதோண்டும் பணியின் போது குழியின் அளவு இடத்துக்கு இடம் மாறுபடும். குடியிருப்புகள் உள்ள பகுதியில் வீடு வாசல் வரை குழாய் அமைப்பது எங்களது பணி. வீட்டுக்கழிவு நீர்க் குழாயை இதனுடன் இணைப்பது மாநகராட்சியின் பணி. இப்பணிகள் அனைத்தும் இன்னும் மூன்று மாதங்களில் முடிக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.