தினமணி 5.11.2009
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 25 பேருக்கு வீடு கட்ட நிதியுதவி
களக்காடு, நவ. 4: களக்காட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 25 பேருக்கு மத்திய, மாநில அரசு உதவியுடன் வீடு கட்டித் தரப்படவுள்ளதாக பேரூராட்சித் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.
களக்காடு பேரூராட்சி அவசரக் கூட்டம் அதன் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பி.சி. ராஜன், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக் கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் உறுப்பினர்களிடையே பேசியதாவது:
களக்காடு பேரூராட்சிப் பகுதியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 25 பேருக்கு தலா ரூ.1.20 லட்சத்தில் புதிதாக வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளன.
இதில், பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஏற்கெனவே அரசிடம் இருந்து இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றிருக்க வேண்டும்.இவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
வீடு கட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.20 லட்சம் வழங்கப்படும். இதில், 10 சதவிகிதத்தை தனது பங்களிப்பாக பயனாளி செலுத்த வேண்டும்.
களக்காடு பேரூராட்சிப் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 25 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பொருட்டு உரிய நபர்களின் பட்டியலை விரைவில் அனுப்பி வைக்குமாறு திருநெல்வேலி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கேட்டுள்ளார் என்றார் அவர்.
அப்போது உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ருக்குமணி, பிரேமா ஆகியோர் தங்களது வார்டுகளில் 10-க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனைப்பட்டாவுக்கு உரிய ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் அவர்களை இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதேபோல, உறுப்பினர்கள் எம்.ஆர். கந்தசாமி, நெல்லையப்பன், அப்துல்மஜீத், ஆகியோரும் தங்களது வார்டுகளிலும் தாழ்த்தப்பட்டோர் பலர் இலவச வீட்டு மனைப் பட்டா வைத்துள்ளனர் அவர்களையும் இத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இத் திட்டத்தின்படி, 25 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒவ்வொருவருக்கும் ரூ.1.20 லட்சத்தை மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வந்துள்ளன. பயனாளிகள் மொத்தமாக ஒரே பகுதியில் இருந்தால் அப் பகுதியில் சாலை, மின்சாரம், குடிநீர், வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தர மத்திய, மாநில அரசுகள் அதிகப்படியான நிதியை ஒதுக்கித்தர முன்வந்துள்ளன என்றார் அவர்.
கூட்டம் முடியும் வரை எந்தெந்த வார்டுகளில் பயனாளிகளை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. 1 மற்றும் 20.வது வார்டுகளில் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிகிறது.