அடுத்த 25 மாதங்களில் 8 குடிநீர்த் திட்டங்கள் நிறைவு பெறும்
தமிழகத்தில் அடுத்த 25 மாதங்களில் 8 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நிறைவு பெறும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அவர் மேலும் பேசியது: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 2010-இல் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. இதன்படி, 2012 டிசம்பருக்குள் பணிகள் முடிவடைய வேண்டும். ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த திமுக, திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்தவில்லை.
13 மாதங்களில் 18 சதப் பணிகளைகூட முடிக்கவில்லை. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று 16 மாதங்களில் 74 சதவீதப் பணிகளை முடித்து இப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2012-இல் தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு 8 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வேலூர் மாவட்டத்துக்கு காவிரிக் குடிநீர் வழங்கும் திட்டத்தை அறிவித்த திமுக அரசு அதைச் செயல்படுத்தாமலேயே அடிக்கல் வைத்தது.
ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இப்போது, 40 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. 12 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிந்து வேலூர் மாவட்டத்துக்கு காவிரி குடிநீர் வழங்கப்படும் என்றார் அவர்.