தினமணி 29.01.2010
ஹோட்டல் உணவு கையாள்பவர்கள் உரிமத்துக்கான கட்டணம் ரூ.250 ஆக குறைப்பு
சென்னை, ஜன. 28: பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு வழங்கிட ஊக்கம் அளிக்கும் வகையில், ஹோட்டல்களில் உணவு கையாள்பவர்களுக்கான உரிமக் கட்டணத்தை ரூ. 500}லிருந்து ரூ. 250}ஆக மாநகராட்சி குறைத்துள்ளது.
இதற்கான தீர்மானம் மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் 57 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.
இருந்தபோதும் தீர்மானங்கள் 19,47 ஆகியவற்றுக்கு கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஒப்பந்தப் பத்திரம் தொடர்பான தீர்மானம் 19}ல் ஏராளமான ஆங்கில எழுத்துப் பிழைகள் உள்ளன. இந்தப் பிழைகள், ஊழலுக்கு வழிவகுத்துவிடும் வாய்ப்பு உள்ளது என்று கவுன்சிலர் மங்கள்ராஜ் கூறினார்.
இதுபோல் பணிகளை ஒப்படைப்பது தொடர்பான தீர்மானம் 47 குறித்துப் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி, “பணியிடங்களை தீர ஆலோசிக்காமல் ஒப்படைப்பதால், பணி நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்‘ என்றார். இதைத் தொடர்ந்து இந்த இரண்டு தீர்மானங்களிலும், கவுன்சிலர்களின் கருத்துகளுக்கு ஏற்ப திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
சுகாதார சீர்கேடின்றி, பொதுமக்களுக்கு உணவு வழங்கிட வழி வகுக்கும் வகையில் ஹோட்டல்களில் பணிபுரியும் உணவு கையாள்பவர்களுக்கு அளிக்கப்படும் உரிமத்துக்கான கட்டணத்தை ரூ. 500}லிருந்து ரூ. 250}ஆக குறைப்பது.
மாநகராட்சி மயானங்களில் சமூக விரோத செயல்களை தடுப்பதற்காக 38 மயானங்களில் முழு நேர காவலர்களை நியமிப்பது.
சென்னை மாநகராட்சியும், மலேசியாவில் உள்ள கோலாலம்பூரம மாநகராட்சியும் உணைந்து சகோதரத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள அரசின் அனுமதி பெறுவது உள்ளிட்ட 57 தீர்மானங்கள் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.