தினமணி 31.08.2010
ரூ2.50 கோடியில் புதிய தெற்கு மண்டல அலுவலகம் திறப்புமதுரை, ஆக. 30: மதுரை மாநகராட்சி சார்பில் மேலமாரட் வீதியில் ரூ| 2.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தெற்கு மண்டல அலுவலகத்தை மேயர் கோ. தேன்மொழி திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
இதுவரையில், தெற்கு மண்டல அலுவலகம் பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள பழங்காலக் கோட்டையில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பொதுமக்கள் வந்து செல்வதற்கும்,வாகனங்களை நிறுத்துவதற்கும் பிரச்னை ஏற்பட்டதால் அலுவலகத்தை வேறிடத்துக்கு மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் இடத்தைத் தேர்வுசெய்து, புதிதாக |ரூ 2.50 கோடியில் அலுவலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு, ஆணையாளர் எஸ்.செபாஸ்டின் தலைமை வகித்தார். துணை மேயர் பி.எம். மன்னன் மற்றும் துணை ஆணையாளர் க. தர்ப்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் தேன்மொழி புதிய அலுவலகத்தைக் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார். பின்னர் ஆணையாளர் கூறுகையில், மதுரை மாநகராட்சி 31-வது வார்டு முதல் 43-வது வார்டு வரையிலும், 60-வது வார்டு முதல் 65-வது வார்டு வரையில் தெற்கு மண்டலத்துக்கு உள்பட்டது.
புதிய அலுவலகத்தில், மண்டலத் தலைவருக்கு தனி அறை, கருத்தரங்கு கூடம், பொறியாளர்களுக்கு தனி அறை, பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 15 நாள்களுக்குள் புதிய அலுவலகம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.
பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு நுழைவு வாயில் கோட்டைரூ |5 லட்சம் செலவில் மறு சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மத்திய காய்கறி அங்காடிக் கடைகள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மத்திய காய்கறி அங்காடி விரைவில் செயல்படத் தொடங்கும் என ஆணையாளர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் அ.மாணிக்கம், வி.கே.குருசாமி, க.இசக்கிமுத்து, கே,நாகராஜன், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.