தினமணி 24.08.2010
பல உறுப்பினர்கள் வார்டு‘ முறையை ஒழிக்கத் தீவிரம் 2,526 ஊராட்சிகளில் வார்டு சீரமைப்பு பணி நிறைவு
கோவை, ஆக.23: ஊராட்சிகளில் “பல உறுப்பினர்கள் வார்டு’ முறையை ஒழித்துவிட்டு, வார்டுக்கு ஓர் உறுப்பினர் முறையைக் கொண்டு வருதற்கான சீரமைப்புப் பணிகள், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 526 ஊராட்சிகளில் முதல் கட்டமாக முடிக்கப்பட்டுள்ளன.
பல உறுப்பினர்கள் வார்டு முறையால் சிக்கல்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் வார்டுக்கு ஓர் கவுன்சிலர் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் ஊராட்சிகளில், ஒரே வார்டுக்கு 2 அல்லது 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் “பல உறுப்பினர்கள் வார்டு’ முறை உள்ளது. இதனால், வார்டுகளில் வளர்ச்சிப் பணிகளை செய்ய முற்படும்போது, அந்த வார்டு உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதில்லை. அதனால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது.
ஓர் உறுப்பினர் முறை கொண்டு வர முடிவு
இதைக் கருத்தில் கொண்டு, பல உறுப்பினர்கள் வார்டு முறையை ஒழித்துவிட்டு, ஒரு வார்டுக்கு ஓர் உறுப்பினரைத் தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவர அரசு முடிவு செய்தது. இதையடுத்து ஊராட்சிகளில் வார்டுகளை சீரமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இனிவரும் உள்ளாட்சித் தேர்தலின்போது, ஊராட்சிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்த இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் என 4 ஓட்டுச் சீட்டுகளில் ஓட்டுப்போடும் நிலை உள்ளது. அதிலும், 2 அல்லது 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வாக்களிக்க வேண்டும். வார்டுக்கு ஓர் உறுப்பினர் முறை கொண்டு வரப்படுவதன் மூலம் கிராமப்புற மக்களுக்கும் வாக்களிப்பது எளிமையாக அமையும்.
வார்டு சீரமைப்பு பணிகள் தீவிரம்
ஓர் உறுப்பினர் முறையைக் கொண்டு வருவதற்காக 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் 2009ம் ஆண்டின் நாடாளுமன்ற வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் தோறுமó அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டின் அடிப்படையில் ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள வார்டுகள் சீரமைப்பு பணிகள், இந்தாண்டு நவம்பர் மாதம் நிறைவு பெறும் என்கின்றனர் அத்துறைப் பணியாளர்கள்.
வார்டுகள் அதிகரிப்பு
பல உறுப்பினர்கள் வார்டில், பொதுப் பிரிவு மற்றும் பொதுப் பிரிவு மகளிர், தாழ்த்தப்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் என ஒதுக்கீடுப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஓர் உறுப்பினர் முறையில் வார்டுகள் ஒதுக்கீடு செய்ய, சீரமைப்பு பணி மூலமாக அதிகப்படியான வார்டுகள் உருவாக்கப்படுகின்றன.
ஊராட்சிகளில், 2 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள ஊராட்சிக்கு 6 வார்டுகள், 6 ஆயிரம் வாக்காளர்கள் வரையில் 9 வார்டுகள், 10 ஆயிரம் வாக்காளர்கள் வரையில் 12 வார்டுகள், 10 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்காளர்கள் உள்ள ஊராட்சிகளில் 15 வார்டுகள் இடம்பெறும்.
நடைமுறைக்கு எப்போது?
இதற்காக வார்டு எல்லைகள் பிரிப்பு, வார்டுகளுக்கான வாக்காளர்கள், இடஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட வார்டு சீரமைப்புப் பணிகள் தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 2 ஆயிரத்து 526 ஊராட்சிகளில் முடிவடைந்துள்ளன.
(அடைப்புக்குறிக்குள் ஊராட்சிகள்) காஞ்சிபுரம் (132), வேலூர் (141), திருச்சி (167), திருநெல்வேலி (82), மதுரை (80), ஈரோடு (45), கோவை (47) உள்பட 2,526 ஊராட்சிகளில் இப்பணிகள் முடிக்கப்பட்டு இறுதி ஆய்வு நடைபெற்று வருகின்றன. இதுபோல, 5 கட்டங்களாக இப்பணிகள் முடிக்கப்பட்டு, அரசாணை வெளியிட்ட பின்னர்தான் இப்புதிய முறை நடைமுறைக்கு வரும்.
முதல்கட்டப் பணி முடிந்தது
கோவை மாவட்டத்தில் உள்ள 229 ஊராட்சிகளில், முதல்கட்டமாக 47 ஊராட்சிகளில் வார்டுகள் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுகுறித்து இப்பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பணிகள்) ஆர்.கே.ரங்கநாதன் கூறுகையில், “”கோவை மாவட்டத்தில் 47 ஊராட்சிகளில் பல உறுப்பினர்கள் வார்டு முறையை நீக்கிவிட்டு ஓர் உறுப்பினர் முறையை கொண்டு வருவதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்த 47 ஊராட்சிகளில் 180 வார்டுகள் இருந்த நிலையில், சீரமைப்புக்குப் பின்னர் 399 வார்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டமாக மேலும் 47 ஊராட்சிகளில் வார்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன’’என்றார்.