தினத்தந்தி 12.07.2013
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 2,536 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர், மேயர் வழங்கினார்கள்
மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை அமைச்சர், மேயர்
வழங்கினார்கள்.
விலையில்லா மடிக்கணினி
மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரத்து 536 மாணவ,
மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா ராஜா
முத்தையா மன்றத்தில் நேற்று காலை நடந்தது. விழாவிற்கு மேயர் ராஜன்செல்லப்பா
தலைமை தாங்கினார். டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், கமிஷனர்
நந்தகேபால் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், அண்ணாத்துரை,
மண்டல தலைவர் சாலைமுத்து, ஜெயவேல், ராஜபாண்டி ஆகியோர் வாழ்த்தி
பேசினார்கள்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்
ராஜூ கலந்து கொண்டு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் அவர்
பேசும் போது கூறியதாவது:–
எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பல்வேறு சிறந்த திட்டங்களை
முதல்–அமைச்சர் வழங்கி வருகிறார். அதிலும் கல்வித்துறைக்கென முதல்வர்
ஏராளமான நிதிகளை ஒதுக்கி உள்ளார். இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.19
ஆயிரத்து 965 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு
பெரிய தொகை எந்த ஒரு மாநிலத்திலும் கல்வி ஒதுக்கப்பட்டதாக வரலாறு இல்லை.
உயர்கல்வி செல்லும் நீங்கள் கல்வி தரத்தை மேம்படுத்தக்கொள்ள வேண்டும்
என்று நோக்கத்தோடு முதல்வர் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகிறார்.
இதன் மூலம் 2023–ம் அண்டு தமிழகம் அனைத்திலும் முதன்மை அடைய வேண்டும் என்ற
லட்சியத்தோடு திட்டங்களை வகித்து வருகிறார்.. முதல்வராக இருந்து இத்தனை
சாதனைகளை செய்து வரும் அவரை, நீங்கள் இந்திய நாட்டை ஆளும் பிரதமராக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் துரைப்பாண்டியன், ஆவின் தலைவர் தங்கம்,
பொருளாளர் ராஜா, மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் ராஜலிங்கம், ஜெயபாலன்,
சுகந்தி, கவுன்சிலர்கள் அண்ணாநகர் முருகன், அபுதாகீர் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.