தினமணி 07.01.2014
255 வீட்டுமனைகளுக்கு 70 ஆயிரம் விண்ணப்பங்கள்
தினமணி 07.01.2014
255 வீட்டுமனைகளுக்கு 70 ஆயிரம் விண்ணப்பங்கள்
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்
(சி.எம்.டி.ஏ.) குலுக்கல் முறையில் விற்பனை செய்ய உள்ள 255 வீட்டுமனைகள்
மற்றும் கடைகளை வாங்க 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாளான திங்கள்கிழமை சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில்
ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது.
மறைமலைநகர், மணலி புதுநகர், கூடலூர், சாத்தாங்காடு ஆகிய இடங்களில்
மொத்தம் 255 வீட்டுமனைகள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அருகில் உள்ள
கடைகளை குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஒதுக்கீடு
செய்ய உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில்
உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் கடந்த மூன்று வாரங்களாக பெறப்பட்டு வந்தன.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாளான திங்கள்கிழமை (ஜனவரி 6) பெறப்பட்ட
35 ஆயிரம் விண்ணப்பங்களுடன் சேர்த்து மொத்தம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கடைசி நாள் என்பதால் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க
ஆயிரக்கணக்கானோர் எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விண்ணப்பங்களின் தகுதியின் அடிப்படையில், பிப்ரவரி 8-ஆம் தேதி வீட்டுமனைகள்
ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் நடைபெறும் என சி.எம்.டி.ஏ. வட்டாரங்கள்
தெரிவித்தன.
70 ஆயிரம் விண்ணப்பங்கள் மூலம் பதிவுக் கட்டணமாக சி.எம்.டி.ஏ.வுக்கு ரூ.
7 கோடி கிடைத்துள்ளது. பதிவுக் கட்டணமாக விண்ணப்பம் ஒன்றுக்கு
பெறப்பட்டுள்ள ரூ.1,000 விண்ணப்பதாரர்களுக்கு திரும்ப தரப்படமாட்டாது
என்பது குறிப்பிடத்தக்கது.