தினமணி 16.04.2010
அவசர கூட்டத்தை கூட்டக் கோரி மேயரிடம் 26 கவுன்சிலர்கள் மனு
கோவை, ஏப். 15: அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்த சம்பவம் தொடர்பாக கோவை மாமன்ற அவசரக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கோரி, 26 கவுன்சிலர்கள் மேயரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கோவை– அம்மன்குளத்தில் ஏழைகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
2 வாரங்களுக்கு முன்பாக, அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி சரிந்தது. சரிந்த கட்டடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாற்று இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது.
இப்பிரச்னை தொடர்பாக மாமன்றத்தில் விவாதிக்க அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், மேயர் ஆர்.வெங்கடாசலத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அதிமுக சார்பில் கவுன்சிலர் குழுத் தலைவர் ப.ராஜ்குமார், துணைத் தலைவர் நடராஜ், மார்க்சிஸ்ட் சார்பில் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் குழுத் தலைவர் கே.புருஷோத்தமன், தேமுதிக சார்பில் ஆர்.கண்ணதாசன், மதிமுக சார்பில் குழுத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் பிற கவுன்சிலர்களும் மேயரை சந்தித்தனர்.
எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கூறும்போது, “மொத்தமுள்ள 72 கவுன்சிலர்களில் மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் (24) வலியுறுத்தினால் அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது உள்ளாட்சிகளின் விதி. எனவே, அவசரக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்‘ என்றனர்.
இது குறித்து மேயரிடம் கேட்டபோது, “மூன்றில் இரண்டு பங்கு கவுன்சிலர்கள் வலியுறுத்தும்போது அவசர கூட்டத்தை கூட்டலாம் என விதி உள்ளது. இருப்பினும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மேயரிடம் தான் உள்ளது. ஆணையருடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுப்போம்‘ என்றார்.