தினமலர் 07.10.2010
மேலவைக்கான உள்ளாட்சி உறுப்பினர்கள் 26 பேரை தேர்வு செய்ய தொகுதி வரையறை
விருதுநகர் : மேலவைக்கான உள்ளாட்சி பிரதிநிதிகள் 26 பேரை தேர்வு செய்வதற்காக தொகுதிகளை தேர்தல் கமிஷன் வரையறை செய்துள்ளது.
மேலவைக்கு உள்ளாட்சி உறுப்பினர்களான நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் சார்பில் 26 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தொகுதிகளை மக்கள் தொகை, உள்ளாட்சி உறுப்பினர்கள் அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு இரண்டு உறுப்பினர்களும், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு உறுப்பினர், திருச்சி, பெரம்பலூருக்கு ஒரு உறுப்பினர், நாகப்பட்டினம், திருவாரூருக்கு ஒரு உறுப்பினர், சிவகங்கை, ராமநாதபுரத்திற்கு ஒரு உறுப்பினர், நாமக்கல், கரூருக்கு ஒரு உறுப்பினர், கடலூர், அரியலூருக்கு ஒரு உறுப்பினர், கோவை, நீலகிரிக்கு ஒரு உறுப்பினர், திண்டுக்கல், தேனிக்கு ஒரு உறுப்பினர் தேர்வு செய்யும் விதமாக தொகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வுக்கு அந்தந்த மாவட்டங்களில் டி.ஆர்.ஓ.,வும், சென்னையில் மாநகராட்சி டி.ஆர்.ஓ.,(நிலம்) பதிவு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு உறுப்பினர் என வரும் போது ஏதாவது ஒரு மாவட்ட டி.ஆர்.ஓ., பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். உதவிப்பதிவு அலுவலர், அந்தந்த மாவட்ட ஊராட்சி வளர்ச்சிப்பிரிவு பி.ஏ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.